×

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா: மகளிர் டி20ல் இந்தியாவுக்கு வெள்ளி

காமன்வெல்த் தொடரில் முதல் முறையாக அறிமுகமான மகளிர் டி20 போட்டியில், இந்தியா வெள்ளிப் பதக்கம் பெற்றது. பைனலில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது (பெத் மூனி 61, மெக் லான்னிங் 36, ஆஷ்லெய் கார்ட்னர் 25, ரச்சேல் ஹேய்ன்ஸ் 18). அடுத்து களமிறங்கிய இந்தியா 19.3 ஓவரில் 152 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜெமிமா 33 ரன், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன் விளாசினர். கடைசி கட்டத்தில் 3 பேர் பதற்றத்துடன் விளையாடி ரன் அவுட்டானது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சரத் கமல் பதக்க வேட்டை

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் அசந்தா சரத் கமல் (40 வயது), 5வது முறையாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்றதுடன் பதக்கங்களையும் குவித்து சாதனை படைத்துள்ளார். பர்மிங்காம் தொடரில் அவர் ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆண்கள் குழு போட்டி, ஆண்கள் இரட்டையர் என 4 பிரிவுகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என மொத்தம் 4 பதக்கங்களை அள்ளினார். ஒற்றையர் பைனலில் நேற்று இங்கிலாந்தின் லயம் பிட்ச்போர்டுடன் நேற்று மோதிய சரத் கமல் 11-13, 11-7, 11-2, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். முன்னதாக, ஆண்கள் குழு போட்டியில் தங்கம், கலப்பு இரட்டையர் பைனலில் அகுலா ஜாவுடன் இணைந்து தங்கம், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சத்யன் ஞானசேகருடன் இணைந்து வெள்ளி வென்றிருந்தார். 2016ல் 2 தங்கம், 2010ல் 1 தங்கம், 2 வெண்கலம், 2014ல் ஒரு வெள்ளி, 2018ல் தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்த அவர் நடப்பு தொடரில் 3 தங்கம் 1 வெள்ளியுடன் தனது காமன்வெல்த் பதக்கவேட்டை எண்ணிக்கையை 13ஆக உயர்த்தியுள்ளார்.

வெண்கலம் வென்றார் சத்யன்

ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது இடத்துக்கான மோதலில் இங்கிலாந்தின் பால் டிரிக்ஹாலை நேற்று எதிர்கொண்ட இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் 11-9, 11-3, 11-5, 8-11, 9-11, 10-12, 11-9 என 7 செட்களில் கடுமையாகப் போராடி வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார்.

சாகருக்கு வெள்ளி

ஆண்கள் குத்துச்சண்டை 92 கிலோ சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் இந்திய வீரர் சாகர் அலாவத் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் இங்கிலாந்தின் டெலிசியஸ் ஓரியிடம் போராடி தோற்று 2வது இடம் பிடித்தார்.

Tags : Commonwealth Games ,India ,Women's T20 , Commonwealth Games: Silver for India in Women's T20
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...