தாழக்குடியில் சூறைக்காற்று காற்றில் பறந்த அரசு பள்ளி மேற்கூரை: மாணவர்கள் கல்வி பயில்வதில் சிக்கல்

ஆரல்வாய்மொழி: தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வீரநாராயணமங்கலம் பகுதியில் இருந்து இறச்சகுளம் செல்லும் சாலையோரமாக அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓட்டு கூரையுடன் கூடிய மிகப்பழைய கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதன் அருகில் மற்றொரு சிறிய கட்டிடம் உள்ளது. அது பழுதடைந்து காணப்பட்டதால் தற்போது சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. அதுபோல நேற்று இரவு தாழக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் காற்றில் பறந்தன. இதனால் கூரையின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்து மழை வெள்ளம் வகுப்பறைக்குள் புகுந்து தேங்கியது.இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் எங்கு அமர்ந்து படிப்பது என தெரியாமல் குழம்பி நின்றனர்.

இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், அருகில் பராமரிப்பு பணி நடந்து வந்த கட்டிடத்தில் மாணவர்களை அமர செய்து வகுப்பபை தொடங்கினர். ஆனால் இங்கு தொடர்ந்து மாணவர்களை அமர செய்து பயிற்றுவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பள்ளி கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து மாணவர்கள் கல்வி பயில எந்த தடையும் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: