வெற்றி கனியை சுவைக்கும் இந்திய வீரர்கள்!: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்..!!

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இன்றுடன் போட்டிகள் நிறைவு பெறக்கூடிய சூழலில் இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து வீரர் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் சத்யன் வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 58 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில்  4வது இடத்தில் உள்ளது. பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் ஆகியோர் தங்கம் வென்ற நிலையில், தற்போது டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதனிடையே, காமன்வெல்த் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கல் ஜரீன் தேசியக் கொடி ஏந்தி செல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கத்தை சரத் கமல் வென்றுள்ளார். இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் குத்துச் சண்டை போட்டி 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இன்றைய நிறைவு விழாவில் சரத்கமலும், நிக்கத் ஜரீனும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: