மூச்சு திணறல் நோயால் குழந்தை அவதி மகள்-மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை: கரூர் அருகே சோகம்

கரூர்: கரூர் அருகே மகள் மற்றும் மகனை தூக்கில் தொங்கவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கந்தபொடிக்காரத் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(34). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷாந்தி(29). இவர்களது மகள் தியாழினி(4), மகன் பூபன் பார்க்கவன்(3).தியாழினிக்கு மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல், நிஷாந்தியும் கடந்த சில மாதங்களாக முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசனும், நிஷாந்தியும் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள அனுமன்பள்ளி பகுதியில் உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளார்.நேற்று மதியம், தனது மனைவியுடன், வெங்கடேசன் போனில் பேசிய நிலையில், 4 மணியளவில், வெங்கடேசன் மீண்டும் போனில் தொடர்பு கொண்ட போது போனை நிஷாந்தி எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த  வெங்கடேசன் அருகில் உள்ள தனது  உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் நேற்று மாலை வெங்கடேசன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் உட்புற கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, துப்பட்டாவின் இரண்டு முனைகளிலும், தியாழினி, பூபன் பார்க்கவன் ஆகியோர் தொங்கிய நிலையிலும், அருகிலேயே துண்டில் நிஷாந்தி தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக இருந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: