பழநி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம்

பழநி: முன்னாள் முதல்வரும், அதிமுக தற்காலிக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பழநி வந்தார். இரவு பழநியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று காலை 7 மணியளவில் பழநி மலை முருகன் கோயிலுக்கு ரோப் கார் மூலம் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பரமசிவம், வேணுகோபாலன் ஆகியோரும் கோயிலுக்கு வந்தனர். முதலில் மலையில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் எடப்பாடி பழனிசாமி, தரிசனம் செய்தார்.

பின்னர் பழநி பால தண்டாயுதபாணி கோயிலில் பாலசுப்பிரமணி அலங்காரத்தில் இருந்த மூலவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து அரை மணி நேரம் மலைக்கோயிலில் உள்ள வரவேற்பாளர் அறையில்  காத்திருந்த அவர், வேடர் அலங்காரத்தில் இருந்த மூலவரையும் தரிசித்தார். சிறுகாலசந்தி மற்றும் காலசந்தி பூஜைகளிலும் பங்கேற்று, முருகனை தரிசனம் செய்தார்.சாமி தரிசனம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அடிவாரம் வந்த அவர், பழநியில் இருந்து தாராபுரம் புறப்பட்டு சென்றார்.

*இடையூறுகள் நீங்கும்

கடந்த 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே கொடநாடு கொலை வழக்கு, தனது ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் தொடர்ந்து நடக்கும் ஐ.டி ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறார். வேடர் அலங்காரத்தில் உள்ள முருகனை தரிசனம் செய்து வழிபட்டால் இடையூறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதையடுத்தே இன்று பழநியில் உள்ள முருகன் கோயிலுக்கு வந்து, எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories: