திருமணம் செய்ய போலீஸ்காரர் மறுப்பு: கத்தியால் கையை கிழித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

திருவாரூர்: திருவாரூரில் திருமணம் செய்துகொள்ள போலீஸ்காரர் மறுத்ததால் பணியிலிருந்த பெண் போலீஸ் கத்தியால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆரியலூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சரண்யா(30). 2018ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவர் திருவாரூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பிரிவில் தர்மபுரியை சேர்ந்த சீனிவாசன்(31) என்பவரும் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரண்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த நிலையில் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.

இதைதொடர்ந்து சரண்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சரண்யா புகார் செய்தார்.இதுதொடர்பாக  விசாரிக்க சீனிவாசனை வரும் 12ம் தேதி ஆஜராகுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா தான் ஏமாற்றப்பட்டதாக கூறி நேற்று மாலை பணியில் இருந்தபோது இடது கையில் கத்தியால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: