ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்எல்சி ஊழியர் ரூ.27 லட்சம் மோசடி

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் -17 பண்ருட்டி சாலையில் வசித்து வருபவர் முருகதாஸ் மகன் ஸ்ரீதரன்(26). நெய்வேலி வட்டம்-13 ஸ்மீத் லேன் தெருவில் வசிப்பவர் ஜோசப் பீட்டர் ஆண்டனி (56). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் முதலாவது நிலக்கரி சுரங்கம் லிக்னைட் பகுதியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஜோசப் பீட்டர் ஆண்டனி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் குடும்ப நண்பர்கள். இந்நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாவுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜோசப் பீட்டர் ஆண்டனி கூறியுள்ளார்.

இதனை நம்பி ஸ்ரீதர் ரூ.27 லட்சத்தை ஜோசப் பீட்டர் ஆண்டனி வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதர், அவரது மனைவி சுவேதாவுக்கு ஜோசப் பீட்டர் ஆண்டனி தபால் மூலம் பணி நியமன ஆணை அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீதரன் அதனைப் பெற்று பார்த்தபோது, அது போலியான நியமன கடிதம் என தெரியவந்தது.இதுகுறித்து அவர் ஜோசப் பீட்டர் ஆண்டனி, அவரது மகன் அந்தோணி ஆகியோரிடம் சென்று கேட்டபோது, வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோசப் பீட்டர் ஆண்டனி இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதே புகாரின் பேரில் ஜோசப் பீட்டர் ஆண்டனி உள்பட இருவர் மீது சென்னை சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: