காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து; கனடா வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்..!!

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் கணிசமான பதக்கங்களை அறுவடை செய்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், காமன்வெல்த் தொடரில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். முன்னதாக, கடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில், பெண்களுக்காக ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனை  மிட்செல் லீ யை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 19 தங்கம் உட்பட 56 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 19வது தங்கம் இதுவாகும்.

Related Stories: