மின் சட்ட திருத்த மசோதா தாக்கலை கண்டித்து திருச்சியில் நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: மின் சட்ட திருத்த மசோதா-2022 நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகும் நிலை உள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மின்வினியோகத்தில் ஒன்றிய அரசின் தலையீடும், மின்வாரிய அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கும் நிலையும் ஏற்படும். அத்துடன் மின்சார வாரியம் தனியார் மயமாகும் நிலையும் உள்ளதாக எதிர்ப்பு நிலவி வருகிறது.

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு இன்று மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தை நடத்தினர். சிஐடியு தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தொமுச பாலு, பொறியாளர் சங்கம் விக்ரமன், என்ஜினீயர் சங்கம் நரசிம்மன், ஐஎன்டியுசி கருணாநிதி, தொழிலாளர் சம்மேளனம் பெருமாள், தமிழ்நாடு ஊழியர் மத்திய அமைப்பு செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்டத்தில் உள்ள 2500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்களில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மின் சட்ட திருத்த மசோதா நகலை திடீரென எரிக்க முயன்றனர். அப்போது அங்கு நின்ற போலீசார், தடுத்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: