ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்: முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள், கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தால் ஆன 3 செ.மீ அளவிலான பட்டயம் கண்டெடுக்கப்பட்டது. வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories: