சித்திரை கார் அறுவடை தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்காக ஆந்திராவில் இருந்து வாத்துக்கள் வருகை-கழிவுகள் உரமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் 1400 ஏக்கரில் சித்திரைக் கார் நெல் நடவு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது நெல் அறுவடை துவங்கிய நிலையில் வாத்து கூட்டங்கள் தா.பழூர் பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை கார் நடவு முடியும் தருவாயில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து பலரும் வாத்துக்களை மேய்ச்சலுக்காக தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள இடங்கண்ணி, காரைக்குறிச்சி முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுக்கு கொண்டு செல்கின்றனர். மோட்டார் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள சித்திர கார் அறுவடை வயல்களில் மேச்சலுக்காக வாத்துகளை கொண்டு வருவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் சித்திரைக் கார் நெல் அறுவடை துவங்கிய நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வாத்துகள் கூட்டம் கூட்டமாக லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. தற்பொழுது அறுவடை முடியும் நிலையில் அடுத்த பட்ட சம்பா சாகுபடி துவங்க உள்ளது. இந்நிலையில் வாத்துகளை வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் வாத்துகளின் கழிவுகள் வயலுக்கு உரமாகிறது. இதனால் அதிகப்படியான மோட்டார் பாசன விவசாயிகள் வயல்களில் நீரை விட்டு வாத்துகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கமாகி உள்ளது.

தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரிகளில் வந்து இறங்கும் வாத்துகளை விவசாயிகள் தங்கள் வயல்களில் மேய்ச்சலுக்காக அனுமதித்து வருகின்றனர். இதனால் வாத்து மேய்ப்பவர்கள் விவசாயிகளின் நிலங்களில் ஆர்வத்துடன் வாத்துகளை மேய்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: