மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இந்தநிலையில் இன்று மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம் வழிவகை செய்யும். குறைந்தபட்சம், அதிகபட்சம் மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது.

மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாகும். மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: