கோவை நகைக்கடையில் ரூ.55 லட்சம் நகை மோசடி ‘ஆன்லைன் ரம்மி’யில் இழந்த சூபர்வைசரிடம் விசாரணை

கோவை: கோவை சலீவன் வீதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (34) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்தது போல் கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும் சில தங்க நகைகளை இவர் மோசடி செய்து வந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த தணிக்கையின் போது ஜெகதீஷ் போலியாக கணக்கு காட்டி 1,467 கிராம் எடையிலான தங்கத்தை அபகரித்து ெகாண்டதாக தெரியவந்தது. 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்யப்பட்டதாக ஜெகதீஷ் மீது வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவர் அளித்த தகவல் போலீசாரை அதிர வைத்தது. ஜெகதீஷ் சில ஆண்டாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாக தெரிகிறது.

 இதில் பணத்தை இழந்த நிலையில், நகை கடையின் தங்கத்தை மோசடியாக கணக்கு காட்டி வெளியே விற்க ஆரம்பித்துள்ளார். ஒரு பவுன் தங்கத்தை இவர் பவுன் 20 ஆயிரம் ரூபாய் என தனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களில் இவர் 2 கோடி ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் குவித்துள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் பல கோடி ரூபாய் சம்பாதிக்க தொடர்ந்து ரம்மி ஆடி வந்துள்ளார். இதில், மொத்த பணத்தையும் இவர் இழந்து விட்டதாக தெரிகிறது. போலீசார் ஜெகதீசின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது அவர் ரம்மி ஆட்டத்தில் குவித்த பணம், இழந்த பணம் குறித்த தகவல் தெரியவந்தது. மேலும், இவர் ெமாத்த பணத்தை இழந்து அவரது வங்கி கணக்கில் 98 பைசா மட்டுமே இருந்தது. போலீசார் இவரிடம் விசாரித்த போது ரம்மி ஆட்டத்தில் இதெல்லாம் சகஜம், விட்ட பணத்தை விட அதிகமாக சம்பாதித்து விடுவேன், ரம்மி ஆடாமல் இருந்தால் எப்படி பணம் வரும் எனக் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: