1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 1.30 லட்சம் கனஅடியாக இருந்தது. அணை நிரம்பி உள்ளதால் இந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பூலாம்பட்டி ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை இடையேயான விசைப்படகு  போக்குவரத்து நேற்று 6வது நாளாக நிறுத்தப்பட்டது. நீர்மின் கதவணைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 இப்பகுதிகளில் வருவாய்த்துறையினர், தேவூர் மற்றும் பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், ஊராட்சி நிர்வாகத்தினர், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 79 டி.எம்.சி. உபரிநீர் வெளியேற்றம்: மேட்டூர் அணை கடந்த 16ம் தேதி நிரம்பியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, வெள்ளநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. கடந்த 24 நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து 79 டி.எம்.சி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் 80 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: