ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்களில் மட்டுமே தங்களின் பணத்தினை முதலீடு செய்ய வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் எல்.என்.எஸ் நிதி நிறுவனம்,பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று, அதற்கு வட்டியாக 6 முதல் 10% வரை வழங்குவதாக அறிவித்து, முதலீடு பெற்றனர். முதிர் தேதிக்கு பிறகும் அவர்கள் பணம் தரவில்லை. இது சம்மந்தமாக சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 79,000 பொதுமக்கள் இந்த நிறுவனங்களில் முதலீடுகள் செய்து ஏமாந்துள்ளனர். அதன் மொத்த தொகை 4 ஆயிரத்து 383 கோடி. பாதிக்கப்பட்ட  முதலீட்டாளர்கள் விசாரணை அதிகாரியிடம் eowlnsifscase@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.

இதேபோலஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடுகளுக்கு மாதவட்டியாக 18 முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என அறிவித்து 1,680 கோடியை முதலீடுகளாக பெற்றுள்ளனர். இதில் சுமார் 89,000 நபர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். திருச்சியில் இயங்கும் எல்பின் இ காம் நிதி நிறுவனம் 400 கோடியை பொது மக்களிடம் முதலீடாக பெற்று ஏமாற்றியுள்ளனர். இந்த நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட 19 வழக்குகளையும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவின் தனி விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். எனவே, பொது மக்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்களில் பொதுமக்கள் தங்களின் பணத்தினை முதலீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: