மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம்; போக்குவரத்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: மாநகர பஸ்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு, மாணவர்களின் பஸ் படிக்கெட்டு பயணம், ஓடும் பஸ்சில் குற்றச்சம்பங்களை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து உயர் ரக சிசிடிவி கேமராக்களை வாங்கி பஸ்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகர் ேபாக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக 31 பணிமனைகளில், 3,454 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் தினசரி சராசரியாக 27.58 லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபமாக எம்டிசி பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், சாதாரண கட்டண பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்றவர்கள் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் பெட்ரோல் உயர்வும் ஒரு காரணம். பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது கல்லுாரி மாணவியர், பணிக்குச் செல்லும் பெண்களை குறிவைத்து சில்மிஷ ஆசாமிகள் தொல்லை கொடுப்பது அடிக்கடி நடக்கிறது.

மற்றொரு புறம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டு, பக்கவாட்டுக் கம்பிகளில் தொங்குவது, கூரை மீது நின்று ரகளையில் ஈடுபடுவது, ஓட்டுனர், நடத்துனர்களை தாக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுதவிர, பிக் பாக்கெட் ஆசாமிகளும், செயின் பறிப்பு திருடர்களும் பேருந்துகளில் கைவரிசை காட்டுகின்றனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையிலும், ெதாடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் எம்டிசி பேருந்துகளில் முதல் கட்டமாக ‘நிர்பயா’திட்டத்தின் கீழ் 2,500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

தற்போது வரை ஒவ்வொரு பேருந்திலும் தலா மூன்று கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தமாக 1,000 எம்டிசி பேருந்துகளில் இத்தகைய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனில் இயங்கும், ‘மொபைல் நெட்வொர்ட் வீடியோ ரெக்கார்டர்’ஆகியவையும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 1,500 பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் தீவிரவிரமாக நடந்து வருகிறது. இதற்காக உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கேமிராக்களை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: