மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், பயிற்சி வரும் 12ம் தேதி தொடக்கம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மேற்கண்ட அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்து மேற்கண்ட அலுவலர்களுடன் பள்ளிகள் நிலை குறித்து உரையாட உள்ளார்.

அந்த நிகழ்வின் போது, ஆகஸ்ட் 1ம் தேதியில் அனைத்து பள்ளிகளிலும் சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக புதியதாக மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களே இல்லாத பள்ளிகள், ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிகள், மாவட்டங்களில் உள்ள உருதுப் பள்ளிகள், முதல் பருவ புத்தகம், இலவச நோட்டுகள் வினியோகம், மாவட்ட வாரியாக பள்ளிகளில் தேவைப்படும் வகுப்பறைகள், கழிப்பறைகள், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை தொடர்பான வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை பொறுத்தவரையில், அங்கீகாரம் புதுப்பித்தல், அனுமதியின்றி  இயங்கும் பள்ளிகள், கல்வித்துறைக்கு வந்துள்ள 14417 புகார்களில் நிலுவையில் உள்ள புகார்கள், பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி, உள்ளிட்ட துறைவாரியான அலுவல்கள், மாணவர்கள் பிரச்னைகள், விளையாட்டுப் போட்டிகள், உளவியல் சார்ந்த கவுன்சலிங் கொடுப்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

Related Stories: