வங்கக் கடலில் காற்றழுத்தம் இன்று தீவிரமடையும்

சென்னை: வங்கக்கடலில் வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தமாக  மாறும். அது இன்று அல்லது நாளை ஒடிசா வழியாக சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும்.  இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் 11ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை  பெய்யும் என்றும் சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அமைய அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடித்து வருகிறது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,  திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் பிற வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நேற்று பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சி, மேலபவானி பகுதியில் 110 மிமீ மழை பெய்தது. சேலம், ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் 7 முதல் 10 மிமீ வரை மழை பெய்தது. அரக்கோணம், காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, வந்தவாசி, கல்பாக்கம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், உளுந்தூர் பேட்டை, நெய்வேலி, சீர்காழி ஆகிய இடங்களில் 2 மிமீ அளவுக்கு நேற்று மழை பெய்தது.

இதற்கிடையே, வங்கக் கடலில் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் உருவான காற்று சுழற்சி வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா இடையே வங்கக் கடலில் நிலை கொண்டது.

அது மேலும் நேற்று வலுப்பெற்று குறைந்த காற்றழுத்தமாக மாறியது. நேற்று இரவு ஒடிசா மேற்கு  வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா வழியாக கரையைக் கடந்து சத்திஸ்கர் மாநிலத்துக்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் இந்த காற்றழுத்தம் காரணமாக கடல் பகுதியின் ஈரக்காற்று உறிஞ்சப்படுவதால், தமிழகத்தில் மழை குறையும். அதனால், 11ம் தேி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: