ஆந்திரா எம்பியின் நிர்வாண வீடியோவை பெற ரூ. 1 கோடி பேரம்? எதிர்க்கட்சிகள் போட்டாபோட்டி

திருமலை: ஆந்திராவில் எம்பியின் நிர்வாண வீடியோ பெற ரூ. 1 கோடி பேரம் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரி காவல் ஆய்வாளராக இருந்தவர் கோரண்ட்லா மாதவ். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். கடந்த 2019ம் ஆண்டு இந்துபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்பி ஆனார். இந்நிலையில், எம்பி கோரண்ட்லா மாதவ், பெண் ஒருவருடன் வீடியோ காலில் நிர்வாண நிலையில் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சிலர் தனக்கும், தனது கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு மார்பிங் செய்து வெளியிட்டதாக கோரண்ட்லா மாதவ் குற்றஞ்சாட்டினார்.

மேலும் உடற்பயிற்சியின்போது எடுத்த தனது வீடியோவை மார்பிங் செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் டெல்லியில் உள்ளார். இருப்பினும் அவர் மீது முதல்வர் ஜெகன்மோகன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வீடியோ காட்சிகள் உண்மைதான் என்றும், அதன் முழு காட்சிகளை பெற எதிர்க்கட்சிகள், சிலருக்கு ரூ. 1 கோடி வரை பேரம் பேசுவதாகவும் சமூக வலைதளங்களில் மற்றொரு தகவல் பரவி வருகிறது. இதனிடையே நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவரை எம்பி கோரண்ட்லா மாதவ் சந்தித்து விளக்கம் அளிக்க முயன்றதாகவும், ஆனால் அவரை சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: