`இந்தியாவில் குணமடையுங்கள்’மருத்துவ சுற்றுலா தகவல்தளம் ஆக.15ல் தொடங்க ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த `இந்தியாவில் குணமடையுங்கள்’என்ற இணையத் தகவல் தளத்தை சுதந்திர தினத்தன்று தொடங்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு 65 முதல் 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இதனால், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள் உள்பட உலகம் முழுவதும் 44 நாடுகளில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கேரளாவில் உள்ள கொச்சி என 12 மாநிலங்களை சேர்ந்த 17 நகரங்களில் உள்ள 37 மருத்துவமனைகளை நாடி நோயாளிகள் வருவதை ஒன்றிய அரசு அடையாளம் கண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்த ‘இந்தியாவில் குணமடையுங்கள்’என்ற இணைய தகவல் தளத்தை பிரதமர் மோடி வரும் 15ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக சுற்றுலா, ஆயுஷ், விமானப் போக்குவரத்து, வெளியுறவு அமைச்சகங்கள், மருத்துவமனைகளுடன் சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி உள்ளது. இதன் மூலம், வெளிநாட்டினர் வந்து செல்வதற்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை, கொச்சி, பெங்களூரு உள்பட 10 விமான நிலையங்களில் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவ மொழி பெயர்ப்பாளர்கள், சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான தகவல் தளத்தில் மருத்துவமனைகள், சிகிச்சைக்காகும் மொத்த செலவு, நவீன, இயற்கை, ஆயுர் வேதம் உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சை முறைகள் குறித்தும் தகவல் அளிக்கப்பட உள்ளன. இரட்டிப்பு வருவாய்: மருத்துவ சுற்றுலா மூலம் 2020 நிதியாண்டில் இந்தியாவுக்கு சுமார் ரூ. 47,622 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வரும் 2026ம் நிதியாண்டில் ரூ. 1.03 லட்சம் கோடியாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: