ஐக்கிய ஜனதா தளம் அதிரடி ஒன்றிய அரசில் சேரமாட்டோம் பீகாரில் பாஜ கூட்டணி முறிகிறதா?

பாட்னா: ‘ஒன்றிய அமைச்சரவையில் ஜேடியு கட்சி மீண்டும் சேராது’என பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியு), பாஜவும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. ஜேடியு கட்சியை  சேர்ந்த ஆர்சிபி சிங் கடந்த ஆண்டு ஒன்றிய உருக்குத்துறை அமைச்சராக பதவியேற்றார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இதையடுத்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த பிரச்னையில் கட்சி தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். ‘ஆர்சிபி. சிங்கின் சொத்து விவரங்களில் பல முரண்பாடுகள் இருக்கிறது. எனவே அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று ஜேடியு கட்சி அவருக்கு  நோட்டீஸ் அனுப்பியது.  இதற்கு பதிலளிக்காத ஆர்சிபி சிங் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜேடியு தேசிய தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,‘‘ஒன்றிய அமைச்சரவையில் ஜேடியு கட்சி மீண்டும் சேராது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் ஒன்றிய அரசில் சேர வேண்டாம் என்று கட்சி முடிவெடுத்தது. அந்த நிலையையே தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம்’’என்றார். ஒன்றிய அமைச்சரவையில் சேர மாட்டோம் என ஜேடியு கட்சி வெளிப்படையாக கூறியிருப்பது, ஜேடியு-பாஜ கூட்டணியில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, ஜனாதிபதி பதவியேற்பு உள்ளிட்ட பாஜ அழைத்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். இதனால், பீகாரில் ஜேடியு-பாஜ கூட்டணி முறியும் நிலை உருவாகி உள்ளது. சமீபகாலமாக எதிர்க்கட்சிகளுடனும் நிதிஷ் நெருக்கம் காட்டி வருகிறார். இது குறித்து ராஜிவ் ரஞ்சனிடம் கேட்டபோது,‘‘கூட்டணி நன்றாக உள்ளது’’என்று ஒரு வரியில் மட்டும் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: