ஊத்தங்கரை அருகே அரசு விடுதியில் மாணவன் தற்கொலை குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை; வார்டன், சமையலர், சக மாணவர்களிடம் கிடுக்கிப்பிடி

ஊத்தங்கரை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள பரமானந்தல் அடுத்த தொட்டிமடுவு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45), விவசாயி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(17), ஊத்தங்கரை அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். இந்த விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், 3 மாணவர்களுடன் வராண்டாவில் அமர்ந்து கோபாலகிருஷ்ணன் படித்துக் கொண்டிருந்தான். பின்னர், தனக்கு தூக்கம் வருவதாக கூறி விட்டு அறைக்கு சென்றவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஏடிஎஸ்பி சங்கு, ஊத்தங்கரை போலீஸ் டிஎஸ்பி அமலா அட்வின், சப்கலெக்டர் ஹமீது பாஷா, தாசில்தார் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் சென்று விசாரணை நடத்தினர். மாணவனின் தந்தை ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விடுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், மாணவன் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளானா என சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கடிதம் எதுவும் சிக்கவில்லை. இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவனின் உடல் நேற்று காலை 11 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால், மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மதன்குமார், டாக்டர்கள் அபிராமி, தியாகராஜன் ஆகியோர் செய்த பிரேத பரிசோதனை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிந்து, மாலையில் மாணவனின் உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலம் போலீசார் பாதுகாப்புடன், மாணவனின் சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  சிபிசிஐடி போலீசார், விடுதியில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கோபாலகிருஷ்ணனின் தாத்தா வீரராகவன், கடந்த ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். அவரது பிரிவை தாங்க முடியாமல், கோபாலகிருஷ்ணன் வேதனையுடன் இருந்துள்ளான். கடந்த 6 மாதத்தில், அவன் 2 முறை தற்கொலைக்கு முயன்றதும், அவனை உடனிருந்த மாணவர்கள் காப்பாற்றியதும் தெரியவந்துள்ளது.

Related Stories: