நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் பெரியாறு நீர்மட்டம் 138.35 அடியாக உயர்வு; 3,166 கன அடி உபரிநீர் கேரள பகுதிக்கு வெளியேற்றம்

கூடலூர்:  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.35 அடியாக உயர்ந்துள்ளது. ரூல்கர்வ் அட்டவணைப்படி அணையின் 10 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,166 கனஅடி நீர் கேரளாவுக்கு உபரி நீராக திறந்துவிடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.35 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,288 கனஅடி.

இதனால், நீர்வரத்தான 5,288 கனஅடியில், தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 2,122 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாக்கியுள்ள 3,166 கனஅடி நீர் பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 10 மதகுகள் வழியாக உபரி நீராக கேரளாவுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்காக அணையின் 6 மதகுகள் 50 செ.மீ, 4 மதகுகள் 30 செ.மீ உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் இருப்புநீர் 6710.20 மில்லியன் கனஅடி. பெரியாற்றில் 21.4 மி.மீ, தேக்கடியில் 36.8 மி.மீ, மழை பதிவாகி இருந்தது. பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ளபோதும், ரூல்கர்வ் அட்டவணை முறைப்படி செப். 10ம் தேதிக்கு மேல்தான் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: