கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி; அமைச்சர், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 4வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.  நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில்  அமைந்துள்ள கலைஞர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கலைஞரின்  உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.

இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏக்கள், திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் மரியாதை செய்தனர். நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அவரின் திருவுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே போல், சிஐடி காலனியில் உள்ள இல்லத்திலும் கலைஞரின் திருவுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் மாற்று திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அத்துடன் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அங்கு கலைஞரின் 4வது நினைவு நாளினையொட்டி, முரசொலி சார்பில் “நினைவில் வாழும் கலைஞர்”எனும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதனை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, முரசொலி செல்வம் பெற்று கொண்டார். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் அவரது சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கி.வீரமணி, வைகோ மரியாதை: கலைஞரின் 4வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சைதை சுப்பிரமணி, டி.சி.ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலைஞர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். விசிக சார்பில் துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். மேலும் கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: