காமன்வெல்த் பாக்சிங்கில் இந்தியாவுக்கு 3 தங்கம்: நீத்து, பாங்கல், நிக்கத் அசத்தல்

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் மற்றும் பாக்சிங்கில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளிய இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.  மகளிர் குத்துச்சண்டை 45-48 கிலோ மினிமம்வெயிட் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் டெமி ஜேட் ரெஸ்டானுக்கு எதிராகக் களமிறங்கிய இந்திய வீராங்கனை நீத்து கங்காஸ் (21 வயது) 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அடுத்து ஆண்கள் குத்துச்சண்டை 48-51 கிலோ பிளைவெயிட் பிரிவு பைனலில் இந்திய வீரர் அமித் பாங்கல் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.

கடந்த முறை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இவர் வெள்ளி வென்றிருந்தார். மகளிர் 48-50 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கார்லி மெக்நாலின் சவாலை எதிர்கொண்ட இந்திய நட்சத்திரமும் உலக சாம்பியனுமான நிக்கத் ஜரீன் அதிரடியாக விளையாடி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் பாக்சிங்கில் நேற்று ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்களும், ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் எல்தோஸ் வென்ற தங்கமும் சேர்த்து இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது.

Related Stories: