முதன்முறையாக சிறிய ரக ராக்கெட் மூலம் மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள் விண்ணில் பாய்ந்தது: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு முதன்முறையாக சிறிய ரக  ராக்கெட் மூலம் இன்று காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் வெற்றிகரமாக பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டுகளை (எஸ்எஸ்எல்வி-டி1)  உருவாக்குவதில் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்கள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும்.

பிஎஸ்எல்வி செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்களைக் காட்டிலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் 10 மீட்டர் குறைந்த நீளம் கொண்டது. பிஎஸ்எல்வி ஊர்தியின் நீளம் 44 மீட்டராக இருக்கும் நிலையில், இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியின் நீளம் 34 மீட்டர் மட்டுமே. பிஎஸ்எல்வி 320 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ராக்கெட்டால் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும்.

இந்த சிறிய செயற்கைக் கோள் ராக்கெட்டினைக் கொண்டு புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள (அஸாதிசாட்) செயற்கைக் கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ சார்பில் மற்ற செயற்கைக் கோள்கள் ராக்கெட்களில் ஏவப்படுவதற்கு 25 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டுக்கு 5 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 02.26 மணியளவில் கவுன்ட் டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு சிறிய ரக ராக்கெட் மூலம் காலை 9.18 மணிக்கு இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

75வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை குறிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 750 மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய அஸாதிசாட் செயற்கோளும் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோள் வடிவமைக்கும் பணியில், தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் 30 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த அஸாதிசாட் செயற்கோளில் 75 விதமான கருவிகள் செயல்பட உள்ளன. இதில் முக்கியமானது  EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதிலுள்ள, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் வசதிகள் மூலம் வெப்ப முரண்பாடுகள் பற்றிய வெப்ப தகவலை  பெற முடியும். விவசாயம், வனவியல், புவியியல், நீரியல், மின்சக்தி மின்னணுவியல், எதிர்வினை சக்கரங்கள் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோளாகவும் இருக்கும்.

அஸாதிசாட் செயற்கைகோள் Space Kidz India என்ற நிறுவனத்தின் முயற்சியாகும்.  நாடு முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள 75 அரசுப் பள்ளிகளில் பயிலும் 750  மாணவிகளுக்கு முறையாக பயிற்சி அளித்து இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டதாக Space Kidz India என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் வகையில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை இந்த சிறிய வாகனம் மூலம் விண்வெளியில் இஸ்ரோ பறக்கவிட்டது. விஞ்ஞானிகளின் இன்றைய சாதனையை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தினர்.

Related Stories: