காது பெருசா இருக்கு, உயரம் மாறியிருக்கு இது, அவர் இல்லை; பொது இடங்களில் சுற்றும் போலி புடின்

கீவ்: ‘தற்போது வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் புடின், நிஜமான புடினே இல்லை, அவரோட டூப்பு’என உக்ரைன் உளவுத்துறை புதுத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 6 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ரஷ்ய அதிபர் புடினுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் அதே வேளையில், ஐரோப்பிய நாடுகளின் உளவுத்துறை புடின் பற்றி எதிர்மறையாக செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. புடினுக்கு ரத்த புற்றுநோய் உள்ளது, அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார், மறைவிடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் ஆதாரமில்லாத தகவல்களை அள்ளி விடுகின்றன. இதற்கெல்லாம் புடினோ, ரஷ்ய அரசோ இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை, மறுக்கவும் இல்லை.  இதற்கிடையே, கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக, எந்த உலக நாடுகளுக்கும் செல்லாமல் இருந்த புடின் தற்போது மீண்டும் சர்வதேச பயணங்களை தொடங்கி உள்ளார்.

சமீபத்தில் அவர் ஈரான், துருக்கி நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், தற்போது பொது இடத்தில் காணப்படுவது நிஜமான புடினே இல்லை என உக்ரைன் ராணுவ உளவுத்துறை பகீர் கவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்பு துறையின் உளவுப்பிரிவு தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘இப்போது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் புடின் நிஜமான புடினே கிடையாது. அவரை போலவே உடல் தோற்றம் கொண்ட போலி நபர். நமது கை ரேகை போல காதுகளும் ரொம்பவே வித்தியாசமானவை. அவற்றை மாற்ற முடியாது. இப்போதுள்ள புடினின் புகைப்படங்களையும், முந்தைய புடினின் போட்டோக்களையும் பார்த்தால், காது மாறுபட்டிருப்பது நன்றாகவே தெரியும். மேலும், உயரத்திலும் மாறுபாடு உள்ளது. நடை, பழக்க வழக்கங்களிலும் நிறைய வித்தியாசம் காணப்படுகிறது. துருக்கியில் அவர் விமானத்தில் இருந்து இறங்கி வருவதை பார்த்தாலே வித்தியாசம் தெரியும்,’என தெரிவித்துள்ளார்.

Related Stories: