சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு தடை; இந்தியாவின் எதிர்ப்பால் திடீர் முடிவு

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, சீனாவின் உளவு கப்பலை அம்பந்தோட்ட துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. இலங்கைக்கு கடன் மேல் கடன் கொடுத்து, இங்குள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இங்கிருந்து, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் கப்பல் அம்பந்தோட்டாவுக்கு வரும் 11ம் தேதி வந்து, 17ம் தேதி வரை முகாமிட்டு இருக்கும் என இலங்கை அரசு தெரிவித்தது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இலங்கையின் இந்த முடிவுக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்துள்ள இலங்கை அரசு, இப்போதைக்கு அம்பந்தோட்டாவுக்கு உளவு கப்பலை அனுப்ப வேண்டாம் என்று சீனாவை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான கடிதத்தை கடந்த 5ம் தேதி சீனாவுக்கு அது எழுதியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதர், ‘கப்பலுக்கு அனுமதி மறுப்பது, இருதரப்பு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்’என்று எச்சரித்துள்ளார்.   

Related Stories: