ரூ2 கோடி ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு: 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலையை விற்க முயன்றதாக 4 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூரில் 300 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்து விற்க உள்ளதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலை தடுப்பு பிரிவு மதுரை சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி மேற்பார்வையில் ஆய்வாளர் கவிதா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், சிலை கடத்தலுக்கு இடைத்தரகர்களாக தூத்துக்குடியை சேர்ந்த ஆறுமுகராஜ்(56), குமரவேல்(32) ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், திருச்சி உறையூர் மேட்டுத் தெருவை சேர்ந்த முஸ்தபா(32) என்பவரிடம் ஐம்பொன் சிலை இருப்பதும், ரூ.2 கோடிக்கு விற்க உள்ளதாகவும் இடைத்தரகர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிலை கடத்தலில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக இடைத்தரகர்கள் ஆறுமுகராஜ், குமரவேல் ஆகியோரை முஸ்தபாவிடம் பேச வைத்து பொதுவான இடத்திற்கு வருமாறு கூறினர்.

அதன்படி, முஸ்தபா, சிலையை எடுத்துக் கொண்டு திருச்சி மதுரை நான்கு வழிசாலையில் உள்ள கிராப்பட்டி பிரிவு சந்திப்பிற்கு  வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள், முஸ்தபாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து 1அடி உயர ஐம்பொன் அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: இந்த சிலையை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளாமடத்தை சேர்ந்த செல்வகுமார், அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இதை முஸ்தபா வீட்டில் வைத்துள்ளார். இந்த சிலை செல்வகுமாருக்கு எப்படி வந்தது என அவரிடம் விசாரித்ததில், செல்வகுமாரின் தந்தை நாகராஜன் குறி சொல்லி வந்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன் குறிசெல்ல சென்றபோது கருவாட்டு வியாபாரியின் தோப்பில் தென்னை மரத்தின் மேலே துணியில் கட்டி வைத்திருந்த அந்த சிலையை எடுத்து நாகராஜனிடம் கொடுத்ததாகவும், அதை வைத்து அவர் சாமி கும்பிட்டு வந்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜன் இறந்து விட்டதால் அந்த சிலையை முஸ்தபாவிடம் விற்க கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆறுமுகராஜ், குமரவேல், முஸ்தபா, செல்வகுமார் ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சிலை ஏதாவது கோயிலிருந்து திருடப்பட்டதா? என  4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: