×

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பறித்த தம்பதி; மனைவி கைது, கணவனுக்கு வலை

தாம்பரம்: வேலூர் மாவட்டம் காட்பாடி, பொண்ணை பகுதியை சேர்ந்தவர் அமுதா (26). இவர் குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி, செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய் ரமேஷ் (38) என்பவர் வாட்ஸ்அப் மூலம் அமுதாவிற்கு அறிமுகமானார். இவர், தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும், யாருக்காவது வெளிநாட்டில் வேலை வேண்டுமானால், வாங்கி  தருகிறேன், எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அமுதா, தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா, என கேட்டுள்ளார். அதற்கு அஜய் ரமேஷ், ‘‘அதிக சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது,’’என கூறியுள்ளார். இதற்காக கமிஷனாக ரூ.50 ஆயிரத்தை கூகுல் பே மூலம் அஜய் ரமேசுக்கு கொடுத்துள்ளார். பின்னர்,  அமுதாவின் நண்பர்களான  ராஜேஷ், சரஸ்வதி, மற்றொரு ராஜேஷ் ஆகியோரிடமும் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால், நீண்ட நாட்களாக வேலை வாங்கி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுபற்றி, அமுதா செல்போனில் அஜய் ரமேஷிடம் வாங்கிய பணத்தை திருப்பி  தருமாறு கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த  அஜய் ரமேஷ், அமுதாவை தரக்குறைவாக பேசி, பணத்தை தர முடியாது என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக கடந்த 3ம் தேதி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் அஜய் ரமேஷின் மனைவி பாரதி (26) என்பவரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்,  சிங்கப்பூரில் வேலை செய்து வரும் அஜய் ரமேஷை சென்னை வரவழைத்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : A couple extorted Rs 3 lakh by claiming to get a job abroad; Wife arrested, husband caught
× RELATED நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக...