×

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு வீடு, வாகன கடன் வட்டி உயரும்: மாத தவணை கட்டணமும் அதிகரிக்கிறது

மும்பை: பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியுள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான மாத தவணையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், கடன் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.4 சதவீதம் உயர்த்தி 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம்  அசாதாரண நிதிக்கொள்கை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வட்டி விகிதம் மேலும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு 4.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது. நடப்பு மாதத்துக்கான நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம், கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் மீண்டும் ரெப்போ வட்டி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு. 5.4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக இருந்தது. நிதிக்கொள்கை முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது:

வங்கிகளின் கடன் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்திய வங்கிகளில் போதுமான பணப்புழக்கம் உள்ளது. கடந்த ஜூனில் பணவீக்கம் 6 சதவீதமாக இருந்தது. உலகளாவிய பணவீக்கம் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும். சமையல் எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளதால், சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

 இந்த உயர்வால் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2023 நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை 7.2 சதவீதமாக ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்படுகிறது. அதாவது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரிக்கப்படும்.  உலக அளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போதைய சூழ்நிலையில் வழக்கமாக எடுக்கப்படும் முடிவுதான். இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், இந்த வட்டி விகிதம் வாடிக்கையாளர்களின் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட்க்கு பின்னர் தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகமாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம், ரெப்போ விகிதம் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.

*ரியல் எஸ்டேட் மந்தமாகும்
ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகையில், ‘‘ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பு, ரியல் எஸ்டேட் துறையை பாதிக்கக்கூடும். வீடு விற்பனை மந்தமாகும். குறிப்பாக, நடுத்தர வருவாய் பிரிவினர் அதிக வட்டிக்கு கடன் வாங்க தயக்கம் காட்டுவார்கள் என்பதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படும். இருப்பினும் இது குறுகிய கால பாதிப்பாகவே இருக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

*நடப்பு நிதியாண்டு முடிவில் 6.5 சதவீதமாக உயர்ந்துவிடும்?
பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘‘பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. எனவே, இத்தகைய நடவடிக்கை நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் தொடர வாய்ப்புகள் உள்ளன. இதே நிலை நீடித்தால், ரெப்போ வட்டி நடப்பு நிதியாண்டு முடிவில் 6 சதவீதம் முதல் 6.5 சதவீதமாக இருக்கும்’’ என்றனர்.

*என்ஆர்ஐகளுக்கு புதிய வசதி
வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் குடும்பத்துக்காக கல்விக்கட்டணம் உட்பட இதர சில கட்டணங்களை செலுத்துவதற்கு பாரத் பில் பேமண்ட்டை பயன்படுத்த விரைவில் வசதி செய்யப்படும். குறிப்பாக, இங்கு வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பாரத் பில் பேமண்ட் மூலம் கட்டணங்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதற்காக மாதம் சுமார் 8 கோடி பரிவர்த்தனைகள் நிகழ்வதாக பள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : Increase in repo rate Increases interest on home, auto loans: Monthly installments also increase
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்