வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்..!

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே மாதத்தில் 4%ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.4% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உலக அளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம்  அதிகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வரும். கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து 1,330 கோடி டாலர் முதலீடு வெளியேறி உள்ளது. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நிலையான டெபாசிட் விகிதத்தை 5.15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். 2022-23 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும்.

இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதால் பணவீக்கத்தோடு கூடிய பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை. பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. சர்வதேச பிரச்சனைகளால் இந்திய பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானது. சந்தையின் நிலையற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: