மோடி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி:  ‘மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ அமைப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் டெல்லி வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.க்கள் எழுப்பினர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில்  நாங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது. நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு, சமூக நல்லிணக்கத்திற்கு உதவும் பணிகளை தொடர்வோம். அவர்கள் என்ன செய்தாலும், எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம். உண்மையை தடுக்க முடியாது,’ என தெரிவித்தார். மேலும், டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மேலும் அழுத்தம் கொடுத்தால் எங்களை அடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். ஜனநாயகத்துக்கு எதிராக மோடியும் அமித்ஷாவும் என்னவெல்லாம் செய்கிறார்களோ, அதற்கு எதிராக போராடுவோம். அவர்கள் என்ன செய்தாலும் அதை பற்றி கவலையில்லை,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தப்பி ஓடுவது யார்?

‘சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி ஓட முடியாது,’ என்று பாஜ கூறியிருப்பது பற்றி ராகுலிடம் கேட்டபோது, ‘‘தப்பி ஓடுவதாக யார் சொன்னது? அவர்கள்தான்  பேசுகிறார்கள். அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்பிக்கள் பிரச்னை எழுப்பினர். இது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றனர். ஆனால், அரசு அனுமதி தரவில்லை,’ என பதிலளித்தார்.

Related Stories: