×

பக்கவாதத்திற்கு பின்னால்...

நன்றி குங்குமம் டாக்டர்

பக்கவாதம் ஒருவரைத் தாக்கிவிடுகிறது. உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் விடுகிறார். அனைத்துவிதமான சிகிச்சைமுறைகளும் அவருக்காக மேற்கொள்ளப்படுகிறது. நோயாளியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்தபிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? நோயாளியின் உடன் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?!

பக்கவாதத்திற்கு பின் நோயாளிக்கு வரும் சில முக்கிய பாதிப்புகள் உணவு விழுங்குவதில் சிரமம், படுக்கைப் புண்(Bedsore), அசைவற்று இருப்பதால் கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பது, சிறுநீரக பாதையில் கிருமித் தொற்று/சிறுநீர் கழிப்பதில் சிரமம், நுரையீரலில் கிருமித் தொற்று, மலச்சிக்கல், வலிப்பு நோய், ஞாபக மறதி, பேசுவதில்/புரிந்துகொள்வதில் ஏற்படும் பாதிப்பு, தூக்கமின்மை, மனச்சோர்வு, குணாதிசயங்களில் மாற்றம். அதிகமாக அழுவது/சிரிப்பது, கண் பார்வையில் பாதிப்பு... இப்படி பல வகையான பாதிப்புகளை பக்கவாத நோயாளிகள் எதிர்கொள்கின்றனர்.

உணவு விழுங்குவதில் சிரமம்

மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஒரு பக்கமாக கை, கால்கள் வலுவிழப்பதைப் போன்று தொண்டை தசைகளும் ஒரு பக்கமாக வலுவை இழந்து விடுவதே உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதற்கான காரணம். அதனையும் மீறி தண்ணீரோ, ஆகாரமோ உட்கொண்டால் இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விழுங்கும் திறன் குறைவாக இருப்பதால் உணவுப்பொருட்கள் உணவு குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்க்குள் சென்று மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காகவே முதல் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மூக்கு வழியாக வயிற்றின் உட்பகுதிக்குச் செல்லும் ரையில்ஸ் டியூப்(Ryles tube) என்று சொல்லக்கூடிய உணவு செலுத்தும் குழாய் பொருத்தப்படுகிறது. அதன் மூலமாக தண்ணீர், பால், கஞ்சி, சூப் மற்றும் திரவ உணவுகள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 200 மிலி வீதம் கொடுக்கப்படுகின்றன.

கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதமாக கலந்திருக்கும் Formula foods என்று சொல்லக்கூடிய டின்னில் இருக்கும் உணவுப் பொருட்களும் பாலிலோ, தண்ணீரிலோ கலந்து உணவுக்குழாய் மூலமாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதன் மூலம் நோயாளிகளுக்கு சத்துக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடிகிறது. தினமும் அவர்களுக்கு விழுங்கும் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு ஸ்பூனில் தண்ணீர் கொடுத்து பரிசோதனை செய்யப்படும். சிறிது நாட்களில் கழித்து விழுங்கும் சக்தியில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு ரைல்ஸ்டியூபினை எடுத்துவிட்டு வாய்வழியாக உணவு வழங்க அனுமதிக்கப்படுகிறது.

நுரையீரல் தொற்று

மேற்கூறியபடி உணவு விழுங்கும் திறன் குறையும்போது உணவு பொருட்கள் தவறுதலாக மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் சென்று நிமோனியா காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது. மேலும் அசைவற்று படுக்கையிலே இருப்பதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள தசைகளின் செயல்திறன் குறைந்து, நுரையீரல் தொற்று நோய் ஏற்படுகிறது. இதற்காகவே பக்கவாத நோயாளிகள் தினமும் மூச்சுபயிற்சிக்கும், செஸ்ட் பிசியோதெரபி என்று சொல்லக்கூடிய சுவாச பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

படுக்கைப் புண்

கை, கால்கள் செயலிழந்து நினைவு குறைந்த நிலையில் இருக்கும் பக்கவாத நோயாளிகளின் உடல் அசைவின்றி இருப்பதாலும், ஒரே பகுதி படுக்கையோடு உராய்ந்துகொண்டே இருப்பதாலும் தோல் வலுவிழந்து உரிந்து அப்படியே நாள்பட்ட புண்ணாக(Bed sore) மாறி விடுகிறது. இப்புண்ணில் கிருமிகளின் தொற்று ஏற்படுமாயின் அத்தொற்று ரத்தத்திலும் பரவி நோயாளியின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவேதான் நோயாளிகளை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வலதுபக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ, முதுகின் பின்னால் ஒரு தலையணையை ஆதரவாக வைத்து மாற்றி மாற்றி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது முதுகு புண் ஏற்படுவதைத் தவிர்க்கும். மேலும் இப்போது தண்ணீர் படுக்கை, காற்று படுக்கை என்ற பலவிதமான படுக்கை வசதிகள் வந்துவிட்டது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் படுக்கைப் புண் உருவாவதை வெகுவாகக் குறைக்க முடியும்.

மலச்சிக்கல்

பக்கவாத நோயாளிகளின் உடல் இயக்கங்கள் குறைவதால் குடலின் அசைவுகளும் குறைகின்றன. எனவே, தினமும் மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. வயிற்றில் வீக்கம் ஏற்படுகிறதா அல்லது வலிக்கிறதா என்று தினமும் சோதனை செய்து பார்த்தல் அவசியம். மலம் எளிதில் வெளியாவதற்கு மருத்துவர் மூலம் மருந்துகளும் கொடுக்கலாம்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

பக்கவாத நோயாளிகள் எழுந்து நடப்பதில் சிரமம் இருப்பதால் அவர்களுக்கு சிறுநீர் கழிக்க ஏதுவாக யூரினரி கதீட்டர்(Urinary catheter) என்று சொல்லக்கூடிய மெல்லிய ரப்பரினாலான டியூபினை சிறுநீர் வெளிவரும் துவாரம் மூலமாக உள்ளே செலுத்தி சிறுநீர் வெளிக்கொணரப்படுகிறது. மேலும் பக்கவாத நோயின் தாக்கம் அதிகமாக இருப்பவர்கள், சுயநினைவற்ற நிலையில் இருக்கும்போது சிறுநீர் கழிக்க யூரினரி டியூபின் உதவி கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்த யூரினரி டியூப்பினால் உள்பக்க சிறுநீர் பாதைகளில் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் இந்த டியூபினை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்வது நல்லது. நோயாளி ஓரளவுக்கு தானாகவோ அல்லது பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்த பிறகு, சிறுநீர் கழிக்கும் உணர்வுகள் சரியாக உள்ளதா என்று பரிசோதித்த பிறகு அந்த டியூபினை அகற்றுதல் அவசியம்.

கால்களில் ரத்தம் உறைதல்

பக்கவாதம் ஏற்பட்டு கைகால்கள் அசைவற்று இருக்கும் நிலையில் குறிப்பாக கால்களில் இருந்து Deep Veins வழியாக இதயத்திற்கு செல்லும் சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதனை டீப் வீனஸ் த்ரோம்போசிஸ்(Deep Venous Thrombosis) என்று சொல்வோம். இதன் பொதுவான அறிகுறிகள் காலில் பாதிக்கப்பட்ட இடத்தில் தொடு வலி, வீக்கம், சூடாக இருத்தல், சிவப்பாக அல்லது நிறம் மாறி காணப்படுதல் போன்றவை. இவ்வாறு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே அசைவற்ற காலில் பிரஷர் பேண்டேஜ்கள் சுற்றப் படுகின்றன,பிசியோதெரபி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

பேசுவதில்/ புரிந்துகொள்வதில் சிரமம்

இடது பக்க மூளைதான் மொழியின் ஆதிக்கத்தை நிர்ணயம் செய்யும் பகுதி. இதனாலேயே இடது பக்க மூளையை டாமினன்ட் ஹேமிஸ்பியர்(Dominant Hemisphere) அதாவது மூளையின் ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்று கூறுவோம். மொழித்திறன் என்பது பேசுவது மட்டுமல்ல; புரிந்து கொள்வது (Comprehending), படிப்பது(Reading), எழுதுவது(Writing), பெயர்கள் சொல்வது(Naming), பார்த்து வரைவது(Copying), திருப்பிச் சொல்வது(Repetition) ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே இடது பக்க மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு உண்டாகி பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு வலது கை, கால்கள் செயலிழந்து போவதோடு மட்டுமல்லாமல், மொழிக்கான பகுதிகளும் செயலிழக்கின்றன. எனவே அவர்களுக்கு புரிந்துகொள்வதும், பேசுவதும், எழுதுவதும், படிப்பதும் சிரமமாகிப் போகிறது. பக்கவாத நோய் ஏற்பட்ட சிலருக்கு பேச்சு நன்றாக வருகிறது; சிலரால் பேச முடியவில்லை என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணம் மூளையின் எந்த பகுதியில் ரத்தக்குழாய் அடைப்பு (அதாவது இடதுபக்கமூளையா அல்லது வலதுபக்கமூளையா) என்பதைப் பொறுத்தே அமையும்.

பக்கவாதம் ஏற்பட்டு முதல் மூன்று மாதங்களுக்குள் பேசும் திறனில் அதீதமான முன்னேற்றம் ஏற்படும். அவர்களுக்கு பேச்சு பயிற்சி, செய்கைகளின் மூலம் பயிற்சி ஆகியவற்றின் மூலம் மொழித்திறனை மேம்படுத்த முடியும். இயன்முறை பயிற்சி மூளையின் கட்டளையை ஏற்றுதான் நம் கை கால்கள் இயங்குகின்றன. மூளையில் அடைப்போ, ரத்தக்கசிவோ ஏற்பட்டால் கை கால்கள் இயங்குவதற்கான கட்டளையை மூளையால் பிறப்பிக்க இயலாது. எனவே நோயாளிகளுக்கு உடம்பில் உள்ள எலும்புகள், தசைகள் நரம்புகள் அனைத்தும் நன்முறையில் இருந்தாலும் மூளை கட்டளை பிறப்பிக்காததால் கை, கால்கள் செயல்பட மறுக்கின்றன. இந்த செயல்படாத கை கால்களை நாமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ அசைத்து பயிற்சி செய்வதுதான் இயன்முறை மருத்துவம் (Physiotherapy). அதாவது செயல்படாத மூளைப்பகுதியை இயன்முறை சிகிச்சை உதவியின் மூலம் தூண்டி செயல்பட வைக்க முயல்வதே இப்பயிற்சியின் நோக்கம்.

மூளையில் அடைப்பு ஏற்பட்ட பகுதி செயலற்றுப் போய்விடும். சிறிது காலம் கழித்து, அவ்விடம் மூளையில் ஒரு தழும்பு போல் மாறிவிடும். நாம் இயன்முறை பயிற்சியின் மூலம் மூளையை தூண்டச் செய்யும்போது அடைபட்ட பகுதியை சுற்றி இருக்கும் நல்ல மூளைப் பகுதிகள் தூண்டப்பட்டு செயல்படாத கை-கால்களை சரி செய்ய முயற்சி செய்யும். இன்னும் புரியும்படி கூற வேண்டுமெனில், உதாரணமாக நீங்கள் சில நாட்கள் உங்களது அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லவில்லையெனில் உங்களது வேலையை உங்கள் அலுவலக நண்பர் செய்ய முயற்சி செய்கிறாரென்றால், அந்த வேலையை அவர் புரிந்து செய்வதற்கு சில காலம் பிடிக்கும். 100% உங்கள் அளவுக்கு நேர்த்தியாக அவரால் செய்ய முடியாமல் போனாலும் 70% முதல் 80% அவரால் உங்கள் வேலையை சில நாட்களுக்குள் செய்ய முடியும்.

அவ்வாறே மூளையின் அடைப்பு ஏற்பட்ட பகுதியின் வேலையை அதனைச் சுற்றி இருக்கும் நல்ல பகுதிகள் செய்ய ஆரம்பிக்கும். இதனை நியூரோனல் பிளாஸ்டிசிடி(Neuronal Plasticity)என்று கூறுவோம். அதாவது மூளையில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் தனது செயல் திறன்களை தானாகவே உருமாற்றிக் கொள்ளும் சக்தியே இது. மூளையின் இத்தன்மையே கடவுள் நமக்கு அளித்த வரம். ஆய்வுகளுக்கு அப்பாற்பட்ட சக்தி இது. எனவே இயன்முறை சிகிச்சையை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக தொடங்கினால் நல்ல முன்னேற்றம் காண முடியும். ஆய்வுகளின்படி 24 மணி நேரத்திற்குள் இயன்முறை சிகிச்சை தொடங்குவது நல்லது.

இயன்முறை சிகிச்சை வகைகள் இரண்டு வகைப்படும். ஒன்று ஆக்டிவ் பிசியோதெரபி(Active physiotherapy), மற்றொன்று பாஸிவ் பிசியோதெரபி (Passive physiotherapy). ஆக்டிவ் பிஸியோதெரபி என்பது இயன்முறை சிகிச்சை நிபுணரின் ஆலோசனைப்படி நோயாளிகள் தானாக பயிற்சி மேற்கொள்வது. பாஸிவ் பிஸியோதெரபி என்பது நோயாளிகள் கை, கால்களை சுத்தமாக அசைக்க முடியாத நிலைமையில் இயன்முறை சிகிச்சை நிபுணரே நோயாளிகளின் கை கால்களை அசைத்து இயக்கி பயிற்சி கொடுப்பது.

(நலம் பெறுவோம்)

தன்னம்பிக்கை தரும் பயிற்சி!

இயன்முறை சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, செய்கைகள் மூலம் பயிற்சி, நுரையீரல் நன்றாக இயங்க மூச்சுப்பயிற்சி, மூளையைத் தூண்டும் இசைப்பயிற்சி, தள்ளாடி நடப்பவர்களுக்கு நடைப்பயிற்சி(Co-ordination) தன்னால் இயன்றஅளவு தனது வேலையை தானாகவே செய்து கொள்வதற்கான ஆக்குபேஷனல் (Occupational) தெரபி ஆகிய அனைத்தும் அடங்கியதுதான் நியூரோ ரிஹேபிலிட்டேஷன்(Neuro Rehabilitation). இப்பயிற்சிகளின் மூலம் நோயாளியின் தன்னம்பிக்கை அதிகரித்து தன்னால் நடக்க முடியும். பழைய வாழ்க்கையை திரும்பி பெற முடியும் என்ற மன தைரியம் உண்டாவதோடு, அவர்களது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது கண்கூடாகப் பார்க்கும் உண்மை. பக்கவாத நோயை அறிவியலின் துணை கொண்டு மனதைரியத்தோடு எதிர்கொண்டால் கண்டிப்பாக வெல்ல முடியும் என்பது நிதர்சனம்.

Tags :
× RELATED மனித இனத்தைப் புரட்டிப் போட்டுள்ள...