வரும் முன் தடுக்கலாம்...

நன்றி குங்குமம் டாக்டர்

சில மாதங்களுக்கு முன் 50 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு ஆகிய எதுவும் கிடையாது. சிகரெட், மதுப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. ஒரு நாள் காலையில் எழுந்தபோது அவரால் பேச முடியவில்லை, வலது கை, கால் எதையும் அசைக்க முடியவில்லை. வாய் ஒரு பக்கம் கோணி இருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது இடது பக்க மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததும், அது பக்கவாதம் என்பதும் தெரிய வந்தது. உலகம் முழுவதும் தற்போது 30 மில்லியன் மக்கள் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு வினாடிகளில் ஒருவரை பக்கவாத நோய்(Stroke) தாக்குகிறது. அதில் 30 சதவீத மக்கள் பக்கவாதம் வந்த நாளன்றே இறக்கின்றனர். உலகில் மக்கள் உயிரிழப்பதற்கு முதலாவது காரணமாக இருப்பது மாரடைப்பு நோய். இரண்டாவது முக்கிய நோய் பக்கவாதம்.

பக்கவாத நோயினால் ஏற்படும் இழப்பு 5 கோடியே 70 லட்சத்திலிருந்து 7 கோடியே 80 லட்சம் வரை என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 87 சதவீத பக்கவாத நோய் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் பாதிக்கிறது. பக்கவாத நோயால் செயலிழந்து பிறரை சார்ந்து வாழ்வோர் சதவிகிதம் 50 முதல் 60 வரை 2030-ல் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் முதியோர்களை அதிகமாக தாக்கிய பக்கவாத நோய் தற்போது 30 முதல் 69 வயது வரை உள்ளவர்களை தாக்குவது 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது வருந்தத்தக்க உண்மை. ஸ்ட்ரோக் என்பது மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு. தமிழில் இதை பக்கவாதம் என்று கூறுகிறோம். பெரும்பாலும் (80 சதவீதம்) நாம் பார்க்கும் ஸ்ட்ரோக் நோயாளிகளுக்கு ஒரு கையும் காலும் செயலிழந்து இருப்பதாலேயே இதற்கு பக்கவாதம் என்னும் பெயர் தமிழில் ஏற்பட்டது.

நமது மூளையின் அமைப்பானது, இடது பக்க மூளை உடம்பின் வலது பக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், வலது பக்க மூளை இடது பக்க முகம், கை கால்களை கட்டுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. எனவேதான் வலது கை கால்களை அசைக்க முடியாமல் போன அவருக்கு இடது பக்க மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதிலுள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக ஸ்கேனில் தெரிய வந்தது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை மாரடைப்பு என்கிறோம். அதுபோல் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை Stroke(பக்கவாதம்) என்கிறோம். பக்கவாதம் இருவகைப்படும். முதல் வகை ரத்தக் குழாய் அடைப்பினால் வருவது; இரண்டாம் வகை ரத்தக்குழாய் வெடித்து அதனால் ஏற்படும் ரத்தக்கசிவினால் வருவது. முதல் வகையானது மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து சிறிது சிறிதாக ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி, ரத்த ஓட்டம் தடைபடுவதால் வருவது.

இதனை இஸ்கீமிக் ஸ்ட்ரோக் (Ischemic stroke) என்று சொல்வோம். இரண்டாவது வகை, மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து மூளையின் உட்பரப்பில் ரத்தக்கசிவு ஏற்படுவதினால் வருவது. இதனை ஹேமராஜிக்(Haemorragic) ஸ்ட்ரோக் என்று சொல்வோம். ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தக்குழாய் வெடிப்பதே இதற்கான காரணம். இந்த இரு வகைகளில் ரத்தக் குழாய் அடைப்பினால் வரும் பக்கவாதம் 80 முதல் 85 சதவீதமாகவும், மீதமுள்ள 15-20 சதவீதம் ரத்தக்குழாய் கசிவினால் வரும் பக்கவாத நோயாகவும் இருக்கும். இந்த இரண்டு வகைகளிலும் பக்கவாத நோய்க்கான காரணிகள் வெவ்வேறாக இருக்கும். மேலும் இந்த இரண்டு ஸ்ட்ரோக் வகைகளுக்குமான சிகிச்சை முறைகள் முற்றிலும் மாறுபாடானது. பக்கவாத நோய்க்கான காரணிகளை மாற்ற முடியாத காரணிகள், மாற்றக்கூடிய காரணிகள் என்று இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம்.

மாற்ற முடியாதது

* வயது

* பாலினம்

* மரபணு

மாற்றக்கூடியது

* புகைப்பிடித்தல்

* மது,போதை பழக்கம்

* ரத்த அழுத்தம்

* சர்க்கரை நோய்

* ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருத்தல்

* இதய நோய்

* உடல் பருமன்

* மூட்டு திசு சம்பந்தப்பட்ட நோய்கள்

* சிறுநீரகக் கோளாறு

* மூளைக்காய்ச்சல்

* வாழ்வியல் முறை மாற்றம்/மன அழுத்தம்

இந்த இரண்டு காரணிகளையும் கொஞ்சம் விரிவாகப் புரிந்துகொள்வோம்.

மாற்ற முடியாத காரணிகள்

பக்கவாதம் பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. ஏனென்றால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்னும் பாதுகாப்பு வளையம் இருப்பதே அதற்கான காரணம். மேலும் தீய பழக்கங்களுக்கு ஆண்களே பெரும்பாலும் அடிமையாக இருக்கின்றனர். வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியனவும் ஆண்களுக்கு அதிகமாக உள்ளது.

வயது

வயது அதிகரிக்கும்போது நமது தோல் எப்படி சுருங்குகிறதோ, முடி எப்படி நரைக்கிறதோ, அதுபோல் ரத்தக் குழாய்களிலும் சில மாற்றங்கள் (தடித்தல், கொழுப்பு படிதல்) ஏற்படுவதினால் வயது ஏறும்போது பக்கவாதம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

மரபணு

மனிதனுக்கு வரக்கூடிய பல நோய்களுக்கு மரபணு மாற்றமே அடிப்படையான காரணம். பக்கவாத நோயும் மரபணு மாற்றத்தினால் வரலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இவ்வாறு ஏற்படுவது மிகக் குறைந்த சதவீதமே.

மாற்றக் கூடிய காரணிகள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவிற்கு முன் 100mg/dl-க்கு குறைவாகவும், உணவிற்குப்பின் 160mg/dl-க்கு குறைவாகவும் இருத்தல் அவசியம். அதுபோல் மூன்று மாத சராசரி ரத்தச்சர்க்கரையின் அளவு 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதும் அவசியம். ரத்தக்கொதிப்பின் அளவை 140/90 க்கு குறைவாக வைத்து இருத்தலும், கொழுப்பின் அளவை குறிப்பாக LDL (கெட்ட கொலஸ்ட்ராலின்) அளவை 100mg/dl கீழ் வைத்து இருத்தலும் பக்கவாத நோய் வராமல் தடுப்பதற்கான எளிய வழிமுறைகள். புகைப்பிடித்தல், மது ஆகியவற்றை விட்டொழிப்பது, உடல் பருமன் ஏறாமல் பார்த்துக்கொள்வது, இதயக் கோளாறுகளுக்கு தகுந்தமுறையில் வைத்தியம் செய்து கொள்வது, தைராய்டு கோளாறுகளுக்கு சரியாக மாத்திரைகள் உட்கொள்வது, நிம்மதியான தூக்கம், கட்டுப்பாடான வாழ்வியல் முறை ஆகியவற்றை முறையாக செய்தாலே ஸ்ட்ரோக் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்.

பக்கவாத அறிகுறிகள்

* ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல்

* ஒரு பக்கமாக வாய்கோணல் மற்றும் கை கால் செயலிழத்தல்

* பேச முடியாமல் போதல்

* ஒருபக்க முகமும், ஒரு பக்க கையும் மட்டும் செயலிழத்தல்

* புரிந்து கொள்ள முடியாமல், பேச முடியாமல் போதல்

* திடீரென்று ஒரு பக்கமாக கை கால்களில் உணர்ச்சியற்று போதல்

* திடீரென நடையில் தள்ளாட்டம் ஏற்படுதல்

* திடீரென்று தலைசுற்றல் வாந்தி, விக்கல் ஏற்படுதல், சாப்பிடும்போது புரை ஏறுதல்

* திடீரென நினைவற்றுப்போதல்

* திடீரென கண் பார்வை மறைத்தல், முற்றிலுமாக பார்க்க முடியாமல் போகுதல்.

இவ்வாறு மூளை ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு பல விதங்களில் வெளிப்படும். ஆனால், பெரும்பாலும் ஒரு பக்க கைகால் செயல் இழந்து போவதை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. நம் மூளையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்துவமாக செயலாற்றும் தன்மை கொண்டது. முன்பக்க மூளை சிந்திப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் பயன்படுகிறது. பின்பக்க மூளை பார்வைக்கும்; மேல் பக்கவாட்டு மூளை உணர்ச்சிகளை புரிந்துகொள்வதற்கும், கீழ்பக்கவாட்டு மூளை ஞாபகசக்திக்கும், காது கேட்கும் திறனுக்கும் தனித்துவமாக செயலாற்றக் கூடியதாக இருக்கிறது. இவற்றில் எந்தப் பகுதிக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அதனை ஸ்ட்ரோக் என்றுதான் கூறுவோம். எனவே ஸ்ட்ரோக்கின் வெளிப்பாடு வெவ்வேறு விதமாக உள்ளது.

55 வயது வங்கி மேலாளர் அவர். சர்க்கரை நோய் உண்டு, அவ்வப்போது சிகரெட் பிடிப்பார், திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்தபோது அவருக்கு தலைசுற்றியது, வாந்தி எடுத்தார், உட்கார முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை, நிற்க முயற்சித்தால் இடது பக்கமாக தள்ளியது. உடனே மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அவரை பரிசோதித்தபோது அவரால் கை, கால்களை அசைக்க முடிந்தது. ஆனால் நின்றாலும், நடந்தாலும் இடது பக்கமாக சாய்ந்தார். அவரது இடது கையின் ஆட்காட்டி விரலை கொண்டு அவரது மூக்கை தொடச் சொன்னபோது அவரால் தடுமாற்றத்துடனேயே செய்ய முடிந்தது. அதே சமயம் வலது ஆட்காட்டி விரலைக் கொண்டு அவரது மூக்கை தொட சொன்னபோது அவரால் எளிதாக தொட முடிந்தது.

இந்த தடுமாற்றத்தை ஆங்கிலத்தில் அடாக்சியா(Ataxia) என்று சொல்வோம். இதற்கு முக்கிய காரணம் இடதுபக்க சிறுமூளையில் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதே. எனவே மயக்கம், தடுமாற்றம் ஆகியவையும் ஸ்ட்ரோக்கின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்தல் அவசியம். நமது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது ரத்தக் குழாய்கள் வழியாக இதயத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது இதனை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முன்பகுதி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை கரோடிட் சிஸ்டம்(Carotid) எனவும், பின்பகுதி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை வெர்டப்ரோ பேசில்லார்(Vertebrobasilar) சிஸ்டம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

மூளையில் முக்கியமாக 10 ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை யாவும் இதயத்திலிருந்து கழுத்து வழியாக மூளைக்குச் சென்று பல கிளைகளாக பிரிந்த மூளையிலுள்ள பகுதிகளுக்கும், கண்களுக்கும் ரத்தத்தை எடுத்து செல்கின்றன. பின்பகுதி மூளையில் அடைப்பு ஏற்பட்டால் மேற்கூறியபடி மயக்கம், வாந்தி, தடுமாற்றம், சுய நினைவிழப்பு ஆகிய அனைத்தும் ஏற்படலாம். மேலும் கைகால்களை அசைக்க முடியும் ஆனால் தடுமாற்றம், நினைவிழப்பு மேலோங்கி

நிற்கும். இதற்கு போஸ்டரியர் சர்குலேஷன் ஸ்ட்ரோக் (Posterior circulation stroke) என்று பெயர்.

இயல்பாக நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் இருக்கும் ரத்தமானது திரவ நிலையிலேயே இருக்கும். இந்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு சிறிது சிறிதாக படிந்து அடைப்பை ஏற்படுத்தி பக்கவாத நோய் உண்டாகிறது. நமக்கு காயம் ஏற்பட்டால் ரத்தம் கசிவதை நிறுத்தும் பொருட்டு நமது பாதுகாப்பிற்காக ரத்தத்தில் உறையும் தன்மையை அதிகப்படுத்தும் அணுக்கள் உள்ளன. இதனை தட்டணுக்கள் என்று கூறுவோம். இந்த அணுக்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் ரத்தம் உறையும் தன்மையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன.

பெரும்பாலும் நமது இடது பக்க மூளையிலேயே புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறனுக்கான மொழி மையம் உள்ளது. இதனால் இடது பக்க மூளையில் அடைப்பு ஏற்பட்டால் வலது கை,கால் செயலிழந்து போவது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளும் திறனும், பேசும் திறனும் இல்லாமல் போகிறது. ஆங்கிலத்தில் இதனை அபேஸியா(Aphasia) என்று சொல்வோம். அதே நேரம் வலது பக்க மூளையில் அடைப்பு ஏற்பட்டால் இடது கை, கால் செயல் இழந்து போகுமே தவிர பேசும் திறனிலும், புரிந்து கொள்ளும் திறனிலும் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே மூளையின் எந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ அந்தப் பகுதியின் தனித்துவமான செயல்திறன் மட்டும் பாதிப்புக்குள்ளாகும்.

(நலம் பெறுவோம்)

Related Stories:

>