பசிக்கின்றதா... எடுத்துக்கோங்க!

நன்றி குங்குமம் தோழி

‘உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...’ என்றும், ‘பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...’ என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.  இன்றைய அவசர உலகில் இதையெல்லாம் கவனிக்காமல் வேகமா கடந்து கொண்டிருக்கும் நம்மை, ‘ஒரு நிமிடம்’ நின்று பார்க்க சொல்கிறார் கோவை, ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை உரிமையாளர் ஷப்ரினா. இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்லாமல், ‘பசிக்கின்றதா... எடுத்துக்கோங்க!’ என எழுதி வைத்து இலவசமாக பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்கும் ஷப்ரினாவின் சொந்த ஊர் சென்னை.

‘‘கணவரின் வேலை காரணமாக கோவைக்கு இடம் பெயர்ந்தோம். இருவருமே பன்னிரண்டு வருடங்கள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தோம். நான்கு மாதங்களுக்கு முன் தான் வேலையை விட்டுட்டு ஏதாவது சொந்தமாக ஆரம்பிக்கலாம் என உணவு சம்பந்தமா செய்வதற்கு முடிவு பண்ணினோம்.

காரணம் இந்த பூமியில் வாழ உணவு ரொம்ப முக்கியம். அதை சார்ந்துதான் எல்லோருமே இயங்குகிறோம். அப்படி நாம் கொடுக்கும் உணவு எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் ரூ.20க்கு பிரியாணி கொடுக்க முடிவு செய்தோம். சாதாரணமாக வெளியில் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வேலை சாப்பாடு எப்படியும் குறைந்தது ரூ.50வது ஆகும். அதில் அவர்களுக்கு ரூ.30தாவது மிச்சப்படுத்தி, அவர்களின் வேறு தேவைகளுக்கு பூர்த்தி செய்வதற்கு உதவ முயல்கிறோம்.   

‘எதனால் நீங்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்’ என்கிற கேள்வி சாதாரணமாக வரும். இது நம் கடமை. மற்றவர்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அவர்களும் இந்த பூமியில், நம் பக்கத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நம்மிடமிருந்து ஒரு பங்கு இருக்கிறது. சமீபத்தில், சாலையில் போய் கொண்டிருக்கும் போது நிறைய பேர் உட்கார்ந்திருப்பதை பார்த்தேன். அதில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும், அவர்களுக்கே என்ன வேண்டும் என்பது தெரியாமலும் இருப்பதை தெரிந்து கொண்டேன். நாம் மூன்று வேலைக்கு ஐந்து வேலைக் கூட சாப்பிடுகிறோம். ஆனால், இவர்கள்? என்று எனக்குள் எழுந்த கேள்வியினை என் கணவரிடம் பகிர்ந்தேன்.

இத்தனை ஆண்டுகாலம் இவர்களை எல்லாம் கடந்து சென்றிருந்தாலும், அன்று எனக்குள் ஏதோ தோன்றிய கேள்வி. அவரும் ‘நாம் ஏதாவது செய்வோம்’ என்றார். வியாபாரத்திற்காக பிரியாணி செய்யும் போது ஒரு இரண்டு கிலோ அரிசி இவங்களுக்காகவும் சேர்த்து போட்டேன். வழக்கமாக விற்பனைக்கு வைக்கும் இடத்திற்கு பக்கத்தில், ‘பசிக்கிறதா... எடுத்துக்கோங்க!’ என்று ஒரு பாக்ஸில் கொஞ்சம் பொட்டலங்களை வைத்தோம்.

இது இலவசம். கையில் காசு இல்லாமல், பசி வாட்டத்தோடு வருபவர்களுக்கு  முதலில் ஒரு மன தடை இருந்திருக்கலாம். என்ன இருக்கிறது என்கிற விஷயமும் தெரியவில்லை. ‘சாப்பாடு இருக்கு சாப்டுறீங்களா’ என்று கேட்டால் ‘சரி’ என்பார்கள்.  இவர்கள் போய் சிலரிடம் சொல்ல, இன்று நாற்பது பேருக்கு மேல் இலவசமாக கொடுத்து வருகிறோம்” என்கிறார் ஷப்ரினா.   

குறைந்த விலையில் பாஸ்மதி அரிசியில் கொடுக்கப்படும் இந்த பிரியாணி வியாபாரத்தை, எந்த ஒரு காரணத்திற்காகவும் நிறுத்தப் போவதில்லையாம். இவர்களுக்கு பிறகு இவர்களது குழந்தைகளும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஷப்ரினா, இதை தொடர்ந்து செய்வதற்கு “எங்கள் மேல் எங்களுக்கே நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்.

அதேப் போல் இன்னும் வாடிக்கையாளர்கள் அதிகமாக வரும் போது, விலை ஏற்றப்படாமல் இதிலிருந்து குறைத்து ரூ.15க்கு தருவோம் என்று கூறும் ஷப்ரினா, “இந்த மன நிலை மாறக்கூடாது என்று கடவுளிடம் கேட்கிறேன்” என்கிறார்.

“பொதுவாக பசியினை அனுபவித்தவர்களுக்கும், அதிலிருந்து வந்தவர்களுக்கும் அதன் வலி தெரியும். உலகத்திலேயே கொடுமையான விஷயம் பசியால் இறப்பதுதான். ஒரு வேலை உணவை வைத்துக் கொண்டு இரண்டு, மூன்று நாட்கள் கூட உயிரோடு இருக்கிறார்கள். நமக்கெல்லாம் மூன்று வேலைக்கு ஐந்து வேலை திணித்து திணித்து உணவு கொடுக்கிறார்கள். மீதமாவதை குப்பை தொட்டியில் போடுகிறோம். அதையும் சிலர் எடுத்து சாப்பிடுவதை பார்க்கிறோம். இது போன்று நிறைய பார்த்திருக்கிறேன்.

நான் தற்போது செய்து கொண்டிருப்பது ஒரு விளம்பரத்திற்காகவோ, பேர் வாங்கணும் போன்ற ஆசைகளுக்காக இல்லை. பிரியாணியில் வரும் காசை என் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கலாம். ஆனால், எங்கள் ஆசை ஒருவருக்காவது உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு 100 பேருக்கு உணவு கொடுப்பது எங்கள் கனவு. ஒருத்தருக்கு கொடுக்க ஆரம்பித்தால் தானே 100 பேருக்கு கொடுக்க முடியும். அதனால் எங்கள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பகுதியை இல்லாதவர்களுக்காக எடுத்து வைக்கிறோம்” என்று கூறும் ஷப்ரினா, இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது எனக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

“சமீபத்தில் ஒரு சின்ன பையனுக்கு பிறந்த நாள் என்று இருபது பார்சல் வாங்கி, அவங்களோட பங்காக இந்த பாக்ஸில் வச்சுட்டாங்க. இது தான் என் வெற்றி. இது தான் வேண்டும்.  இது நாள் வரை அந்த மாதிரி செய்தார்களா என்று தெரியவில்லை. அவங்களும் ‘நீங்கள் செய்வதை கேள்விப்பட்டு வந்திருக்கிறோம்’ என்று சொல்லும் போது சிறு மாற்றத்திற்கான ஒரு விதையாக என்னை பார்க்கிறேன். இதேப்போல் ஒரு அக்கா, ‘எங்கள் வீட்டு பக்கத்தில் பத்து பார்சல் தக்காளி சாதமும், தயிர் சாதமும் செய்து வைக்கிறேன்’ என்று சொல்லிட்டு போனாங்க. இது எல்லாமே தான் நான் செய்யும் வேலை சரியாக இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு நபரையாவது நாம் சந்திக்கிறோம். அந்த ஒருவருக்கு இருக்கும் நாம் ஏதாவது செய்யலாம் என்று. உணவு கொடுப்பது மட்டுமல்ல… உடலால், கையால், காலால், மனதால், சொல்லால்… என்று ஏதோ ஒரு வகையில் நம் உதவியினை பரிமாறலாம். எல்லோருக்கும் மனித நேயம், அன்பு, கருணை இருக்கிறது. அதற்கு சரியான நேரம் அமைவதில்லை. அந்த நேரத்தை அமைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது” என்றார்.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: சதீஷ்

Related Stories: