லவ்வர்ஸ் ரெசிபி

நன்றி குங்குமம் தோழி

லவ்வர்ஸ் லாலிபாப்

தேவையானவை :

துருவிய சாக்லெட் - 250 கிராம் (டார்க் - 200 கிராம்,

வொய்ட் - 50 கிராம்),

இதய வடிவ லாலிபாப் (அ)

சாக்லெட் மோல்ட் - 1,

லாலிபாப் குச்சிகள் - 5,

இதய வடிவில் உள்ள சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவைக்கேற்ப,

லாலிபாப் பேப்பர் - தேவைக்கேற்ப,

பைப்பிங் பை - 2,

சிகப்பு (அ) பிங்க்,

புட் கலர்,

கலர் ரிப்பன் - 1/2 மீட்டர்.

செய்முறை:

முதலில் டார்க் சாக்லெட்டை டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். பின் அதை சாக்லெட் மோல்டில் ஊற்றி, லாலிபாப் குச்சியை நடுவில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கவும். சாக்லெட் செட்டானதும், ஒரு தட்டில் வைக்கவும். அதே போல் வெள்ளை சாக்லெட்டை உருக்கி, அதில் சிகப்பு புட் கலர் சேர்த்து கலந்து சாக்லெட் மோல்டில் ஊற்றி இதே போல் லாலிபாப்களை செய்யலாம். பைப்பிங் பையின் நுனியினை மெல்லியதாக வெட்டி அதில் மீதியுள்ள சாக்லெட்டை உருக்கி ஊற்றி லாலிபாப் மீது வாக்கியங்கள் எழுதலாம். சின்ன சின்ன இதய வடிவங்களை வடிவமைக்கலாம் அல்லது ஸ்பிரிங்கில்ஸ் தூவி அலங்கரித்து, ரிப்பன் கட்டி பூங்கொத்துபோல் செய்து கொடுக்கலாம்.

இதயத்தை திருடும் பிஸ்கெட்ஸ்

தேவையானவை :

மைதா - 175 கிராம்,
சர்க்கரை (பொடித்தது) - 115 கிராம்,

வெண்ணெய் (உப்பில்லாதது) - 115 கிராம்,

உப்பு - 1 சிட்டிகை,

வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

பால் - தேவையான அளவு,

பைப்பிங் பேக் - 1,

புட் கலர் -  சிகப்பு,

ரோஸ்,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவைக்கேற்ப,

ஐசிங் சுகர் - 100 கிராம்,

பிஸ்கெட் கட்டர் - 1.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து, சிறிது பால் சேர்த்து பிசைந்து பூரிகட்டை கொண்டு பிஸ்கெட் மாவை தேய்த்து, பிஸ்கெட் கட்டர் கொண்டு வெட்டி, பிரிஹீட் ஓவனில், 200 டிகிரியில் வேகவைக்கவும். ஒரு சின்ன பாத்திரத்தில் ஐசிங் சுகர் சேர்த்து, சிறிது பால் மற்றும் விரும்பிய நிறம் சேர்த்து கலந்து பிஸ்கெட் மேல் தடவி ஸ்பிரிங்கில்ஸ் தூவி 20 நிமிடம் வைத்து பரிமாறவும்.

சர்ப்ரைஸ் சாக்லெட் பாக்ஸ்

தேவையானவை :

முட்டை வடிவ சாக்லெட் மோல்ட் - 1,

துருவிய சாக்லெட் - 250 கிராம்,

மார்ஷ்மெல்லோ சாக்லேட் - 4 to 5,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவையான அளவு,

சாக்லெட் பேப்பர் - 2 to 3.

செய்முறை :
 

துருவிய சாக்லெட்டை டபுள் பாயில் முறையில் உறுக்கி முட்டை வடிவ மோல்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து பிறகு தனியாக எடுக்கவும்.

பார்க்க முட்டையின் ஒரு பாதி போல் இருக்கும். அதே போல் மற்றொரு பகுதியையும் சாக்லெட்டில் செய்து கொள்ளவும். ஒரு முட்டையின் பாதியில் விரும்பிய பரிசு (சின்ன மோதிரம் அல்லது பெண்டென்ட் வைக்கலாம்) மற்றும் மார்ஷ்மெல்லோ சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கில்ஸ் கொண்டு நிரப்பவும். மற்றொரு பாதியினை சூடான தட்டின்மேல் 1 நொடி வைத்து எடுத்து, அதை மற்றொரு சாக்லெட்டின் மேல் மூடி, ஒரு நிமிடம் பிடிக்கவும். இரண்டும் ஒட்டிக் கொண்டு பார்க்க முட்டை போல் இருக்கும். சாக்லெட் பேப்பரில் சுற்றி ஸ்பெஷலான பரிசாக கொடுக்கலாம்.

சாக்லெட் மூஸ்

தேவையானவை :

மூஸ் செய்ய...

துருவிய சாக்லெட் - 100 கிராம்,

விப்பிங் கிரீம் - 200 மில்லி,

பைப்பிங் பை - 1.

சாக்லெட் செய்ய...

துருவிய சாக்லெட் - 200 கிராம்,

ஸ்ட்ராபெர்ரி - 4,

சாக்லெட் மேல்ட் - 1,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவையானவை.

செய்முறை :

துருவிய சாக்லெட்டை டபுள் பாயில் முறையில் உறுக்கி மோல்டில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்து, எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீம் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் 100 கிராம் துருவிய சாக்லெட்டை உறுக்கி கிரீமில் நன்கு கலந்து, அதை ஒரு பைப்பிங் பையில் நிரப்பி வைக்கவும். செய்து வைத்த இதய வடிவிலான சாக்லெட்டை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் பைப்பிங் பையில் உள்ள சாக்லெட் கொண்ட நிரப்பி சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் தூவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரிக்கவும்.

பினாடா கேக்

தேவையானவை :

பினாடா கேக் மோல்ட் - 1,

சாக்லெட் துருவியது - 300 கிராம்,  

பரிசு பொருள் - உள்ளே வைக்க,

சின்ன கேக் - 1,

பெரிய மற்றும் சிறிய சாக்லெட் - 4 to 5,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - அலங்கரிக்க,

ரிப்பன் -  1/2 மீட்டர் (தேவையெனில்).

செய்முறை :

சாக்லெட்டை உறுக்கவும். அதை பினாடா மோல்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைக்கவும். பின் அதை எடுத்து அதில் மீண்டும் சிறிதளவு உருக்கிய சாக்லெட்டை ஊற்றி (ரொம்ப சூடாக வேண்டாம்) மீண்டும் ஃபிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து, தனியே எடுக்கவும். இதே போல் இன்னொரு சாக்லெட் செய்து கொள்ளவும். கேக் வைக்கும் அட்டையை எடுத்து, அதன் நடுவில் உருக்கிய சாக்லெட் சிறிது வைத்து அதன்மேல் முதலில் செய்த சாக்லெட் வைத்து அதன் நடுவே கேக் மற்றும் பரிசு பொருட்களை வைத்து அதன் மேல் மற்ெறாரு சாக்லெட்டினை வைத்து மூடவும். அவ்வாறு வைக்கும் போது ஒரு சூடான தட்டில் 1 நிமிடம் வைத்து எடுத்து வைக்கலாம். ரிப்பன் கட்டி அழகாக கொடுக்கலாம். இந்த பினாடா மோல்டுடன் ஒரு மர சுத்தி கிடைக்கும். அதைக்கொண்டு இந்த சாக்லெட் இதயத்தை உடைத்தால் உள்ளே பரிசு கிடைக்கும்.

கேக் இன்சைட் சாக்லெட்

தேவையானவை :

வெனிலா (அ) சாக்லெட் கேக் - 1,

கேக் கட்டர் - 1,

சாக்லெட் துருவியது - 200 கிராம்,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவைக்கேற்ப,

பட்டர் பேப்பர் - 1,

கூலிங் ரேக் - 1.

செய்முறை :

முதலில் கேக்கை குறுக்கு வாக்கில் சன்னமாக வெட்டி வைக்கவும். பின் அதை கேக் கட்டர் கொண்டு வெட்டவும். சாக்லெட்டை உருக்கவும். பரிசு பொருளை உருக்கிய சாக்லெட்டில் நனைத்து, ஒரு பட்டர் பேப்பர் மேல் வைத்து ஸ்பிரிங்கில்ஸ் கொண்டு அலங்கரித்து ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து அதை வெட்டப்பட்ட கேக்கின் நடுவே வைத்து அலங்கரித்து கொடுக்கவும்.

சுகர் குக்கீஸ்

தேவையானவை :

மைதா - 280 கிராம்,

வெண்ணெய் (உப்பில்லாதது) - 170 கிராம்,

சர்க்கரை (பொடித்தது) - 150 கிராம்,

உப்பு -  1/4 டீஸ்பூன்,

முட்டை - 1,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

பட்டர் பேப்பர் - 2,

குக்கீஸ் கட்டர் - 1,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - அலங்கரிக்க,

ஐசிங் சுகர் - 100 கிராம்,

புட் கலர் - சிகப்பு,

பால் - சிறிது.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், பால், புட் கலர் சேர்த்து திக்காக கலந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையும் நன்கு அடிக்கவும். பின் அதில் முட்டை, வெனிலா எசென்ஸ் ஊற்றி 1 நிமிடம் எல்லாவற்றையும் நன்றாக அடித்து அதில் மைதா கலவையை சேர்த்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பிசையவும். குழைவாக இருந்தால் சிறிது மைதா  சேர்க்கலாம். மாவை இரண்டாகப் பிரித்து, பட்டர் பேப்பர் மேல் வைத்து பூரி கட்டையால் தேய்த்து, Clingflim  கொண்டு மூடி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுத்து, குக்கூஸ் கட்டரில் வெட்டி பிரீஹீட் ஓவனில் 200 டிகிரியில் வேகவைத்து ஆறியபின் ஐசிங் சுகர் ஸ்பிரிங்கில்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

காதலர் தின கப் கேக்

தேவையானவை :

மைதா - 110 கிராம்,

சர்க்கரை (பொடித்தது) - 110 கிராம்,

வெண்ணெய் (உப்பில்லாதது) - 110 கிராம்,

முட்டை - 2,

கப் கேக் மோல்ட் - 4,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

உப்பு - 1 சிட்டிகை.

அலங்கரிக்க :

விப்பிங் கிரீம் - 200 மி.லி,

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடித்தது),

வெனிலா எசென்ஸ் -  1/2 டீஸ்பூன்,

பைப்பிங் பேக் - 1,

சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ் - தேவைக்கேற்ப,

ஸ்டார் நாசில் - 1,

பட்டர் பேப்பர் - 1,

துருகிய சாக்லெட் - 100 கிராம்.

செய்முறை :

முதலில் ஓவனை 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை, முட்டையை சேர்த்து அடித்து, அதில் எசென்ஸ் மற்றும் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கப் கேக் மோல்டில் பாதி நிரப்பி, 15-20 நிமிடம் 150 டிகிரி வேக வைக்கவும். விப்பிங் கிரீம் செய்முறை ஒரு பாத்திரத்தில் கிரீம் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் பொடித்த சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து பைப்பிங் பேகில் போட்டு வைக்கவும். கலர் வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.  சாக்லெட்டை உருக்கி பைப்பிங் பையில் ஊற்றி, நுனியில் சின்னதாக வெட்டி  மருதாணி போடுவதுபோல் பிடித்து, பட்டர் பேப்பர் மேல் எழுத்துக்களை எழுதி ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் கழித்து எடுக்கவும்.கப் கேக்கை எடுத்து அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன் நடுவில் மோதிரம் அல்லது பரிசுப் பொருட்களை வைத்து மீண்டும் விப்பிங் கிரீம் கொண்டு நிரப்பி அதன் மேல் சாக்லெட்டில் எழுதிய எழுத்தை வைத்து, ஸ்பிரிங்கில்ஸ் தூவி பரிசளிக்கலாம்.

புதையல் கேக்

தேவையானவை :

முட்டை - 3,

சர்க்கரை பொடித்தது - 100 கிராம்,

மைதா - 75 கிராம்,

ரீபைண்ட் எண்ணை - 55 மி.லி,

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

ஜெம்ஸ் மற்றும் சாக்லெட் ஸ்பிரிங்கில்ஸ்  - தேவையானவை.

பட்டர் கிரீம் செய்ய :

வெண்ணெய் (உப்பில்லாதது) - 200 கிராம்,

சர்க்கரை (பொடித்தது) - 200 கிராம்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.

கேக் செய்முறை :

முதலில் ஓவனை பத்து நிமிடம் பிரீஹீட் செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடித்து பின் சர்க்கரையை அதில் சேர்த்து அடிக்கவும். பின் அதில் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து அடித்து, எண்ணை, எசென்ஸ், மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து நல்கு கலக்கி, 25 நிமிடம் 150 டிகிரியில் வேக வைக்கவும். ஆறிய கேக்கினை ஒரு துண்டு வெட்டி, அதன் நடுவே ஜெம்ஸ்  மற்றும் பரிசு பொருள் வைத்து வெட்டிய கேக்கை வைத்து மூடி அதன்மேல் கிரீமை தடவி, மேலும் ஸ்பிரிங்கில்ஸ் தூவி அழகாக பரிசளிக்கலாம்.

ரெட் வெல்வெட் கேக்

தேவையானவை :

கேக் மோல்ட் - 2 (இதய வடிவில்),

வெண்ணெய் (உப்பில்லாதது) - 120 கிராம்,

மைதா - 300 கிராம்,

சர்க்கரை - 300 கிராம் (பொடித்தது),

உப்பு - சிட்டிகை,

கோகோ பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்,

பால் - 240 மி.லி,

முட்டை - 2 பெரியது,

சிகப்பு புட் கலர் - 1 டீஸ்பூன்,

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க :

கிரீம் சீஸ் - 300 கிராம்,

விப்பிங் கிரீம் - 200 கிராம்,

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,

பொடித்த சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் பால், எசென்ஸ், வினிகர் மற்றும் சிகப்பு புட் கலர் கலந்து வைக்கவும். வெண்ணெய் கலவையில், மைதா மற்றும் பால் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பாடுலா கொண்டு கலக்கவும். கேக் கலவையை இரண்டாக பிரித்து வேக வைத்து 150 டிகிரியில் 20-25 நிமிடம் ஓவனில் வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீமை அடித்து, அதில் பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ், கிரீம், சீஸ், சேர்த்து நன்கு அடித்து இரண்டு கேக்கின் நடுவே தடவி, பின் கேக்கின் மேற்புறத்திலும் தடவி அலங்கரிக்கலாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: