குடல் நலன் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்!

அவர் ஒரு தனியார் வங்கியின் மேல்நிலை நிர்வாகி. வயது 50 இருக்கும். பணிநிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுகொண்டிருப்பார். அப்போதெல்லாம் உடல் அசதி வாட்டியது. அதற்கு ‘வேலைப் பளுதான் காரணம்’என்று நினைத்துக் கொண்டார். மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசிந்தது. பயணத்தால் ஏற்படும் ‘உடல் சூடு’ என்று அவராகவே முடிவு செய்துகொண்டார். சமயங்களில் இது குறித்து நண்பர்களிடம் சொன்னபோது ‘மூல நோய்’இருந்தாலும் அப்படி ரத்தம் வெளியேறும் என்றார்கள்; மருத்துவரைப் பார்த்துக்கொள்வது நல்லது என்றார்கள். ஆனாலும் மருத்துவரைப் பார்க்க நேரமில்லாமல் அவருக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளைக் கையாண்டார். மலத்தில் ரத்தம் வெளியேறுவது மட்டும் குறையவே இல்லை. போகப்போக பசி குறைந்தது. உடல் எடையும் குறையத் தொடங்கியது. அசதி அதிகமானது. வேலையே செய்ய முடியவில்லை.

ஒருமுறை அவர் வங்கி வேலையாக ராஜபாளையம் வந்திருந்தபோது என் உள்ளூர் நண்பரின் துணையுடன் என்னிடம் வந்தார். எளிய மலக்குடல் பரிசோதனையிலேயே அவருடைய பிரச்னை எனக்குப் புரிந்துவிட்டது. என்றாலும் ரத்தப் பரிசோதனை, சி.டி.ஸ்கேன் பரிசோதனை மற்றும் திசுப் பரிசோதனைகளை மேற்கொண்டு அவருடைய பிரச்னையை உறுதி செய்தேன். ஆம், அவருக்கு மலக்குடலில் புற்றுக்கட்டி மூன்றாம் நிலையில் இருந்தது. அவரை சென்னையில் உள்ள புற்றுநோய் மையத்துக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்தேன். இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆனாலும் அவர் புற்றுநோயிலிருந்து மீண்டுவர பல மாதங்கள் சிரமப்பட்டார். காரணம் அவர் செய்த கால தாமதம். மருத்துவரிடம் பரிசோதனைக்கு வர தயக்கம் காட்டுவதுதான் இந்தக் காலதாமதத்துக்கு அடிப்படை காரணம். இந்தத் தாமதம்தான் புற்றுநோய் மருத்துவத்தில் மிகவும் ஆபத்தானது.

வங்கி நிர்வாகி மலத்தில் ரத்தம் கசியத் தொடங்கியதுமே மருத்துவரைப் பார்த்திருந்தால், புற்றுநோயை முதல் நிலையிலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம்; சிகிச்சையில் சிரமங்கள் இருந்திருக்காது. புற்றுநோய் விஷயத்தில் படித்தவர்களே இப்படித் தவறு செய்யும்போது பாமர மக்களின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. புற்றுநோய் இல்லாத உலகம் படைக்க நோய் குறித்த உண்மையான புரிதலும் தகுந்த விழிப்புணர்வும்தான் மிகவும் முக்கியம்.

எது குடல் புற்றுநோய்?!

உணவு செரிமான மண்டலத்தில் இரைப்பைக்கு அடுத்தபடியாக சிறுகுடல் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெருங்குடல் அமைந்துள்ளது. இதன் இறுதிப் பகுதி மலக்குடல் ஆகிறது. இது மல வாயில் முடிகிறது. இரைப்பையிலிருந்து வரும் உணவுக்கூழில் உள்ள அநேக சத்துகள் சிறுகுடலில் உறிஞ்சப்பட்டதும் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகிறது. அங்கு உணவுக்கூழில் மீதமுள்ள தண்ணீர்ச் சத்து உறிஞ்சப்பட்டு திடமாகிச் சக்கையாகிறது. அதுதான் மலமாக மலக்குடலுக்குள் வந்து சேருகிறது. அது மலவாயின் வழியாக வெளியேறுகிறது. குடல் பல சவ்வு அடுக்குகளால் ஆனது. இங்கு ஆரம்பத்தில் சிறிய புண் போல் தோன்றி, தடிப்பு உண்டாகி, கட்டியாக மாறுகிறது, குடல் புற்றுநோய். ஆரம்பத்தில் இதில் வலி எதுவும் இருக்காது என்பதால் அநேகரும் இதை அலட்சியப்படுத்துவது நடைமுறை. நோயானது பல கட்டங்கள் கடந்த பிறகுதான் மருத்துவரிடம் வருவார்கள்.

ஒரு சிலருக்கு வயதுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் வழக்கமான ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’பின்போது குடல் புற்றுநோய் இருப்பது அறியப்படுவது உண்டு. பெண்களுக்கு பெரும்பாலும் பெருங்குடல் வாய் பகுதியில்தான்(Caecum cancer) புற்றுநோய் வருகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வரிசையில் நுரையீரல், இரைப்பை, மார்பகத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது, குடல் புற்றுநோய். உலகில் வருடா வருடம் 12 லட்சம் பேருக்குப் புதிதாக குடல் புற்றுநோய் வருகிறது. வருடத்தில் 6 லட்சம் பேர் இதனால் இறக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் இது குறைவுதான் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி.

என்னென்ன காரணங்கள்?

குடல் புற்றுநோய்க்கு மூப்பு முதல் காரணம். பெரும்பாலும் 50 வயதைக் கடந்தவர்களுக்கு இது ஏற்படுகிறது. விதிவிலக்காக, APC, K-RAS, DCC, p53 ஆகிய புற்று மரபணுக்கள் காரணமாகக் குடலில் ‘பாலிப்’ (Polyp) எனப்படும் குடல் விழுதுக் கட்டிகள் இருப்பவர்களுக்கு 40 வயதிலேயே குடல் புற்றுநோய்  வருகிறது. அதிலும் முக்கியமாக ‘அடினோமா’ (Adenoma) எனும் கட்டிகள் இருக்குமானால் இவர்களுக்கு அவை புற்றுக்கட்டிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். குடலில் அழற்சிப் புண்கள் (Ulcerative colitis) மற்றும் கிரான் குடல் அழற்சி நோய் (Crohn’s colitis) தோன்றுபவர்களுக்கு நாளாக ஆக அவை புற்றுக்கட்டிகளாக மாறிவிட வாய்ப்புண்டு. குடும்பத்தில் யாருக்காவது குடல் புற்றுநோய் வந்திருந்தால் அவர்கள் வாரிசுகளுக்கும் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

புகைபிடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கூடுதலாகிறது. குடி குடியை மட்டுமல்ல, குடலையும் அழிக்கும் என்பதை இன்னும் புரியாதவர்கள் நம்மிடம் அதிகம். தமிழக மக்கள் சிறுதானிய உணவுகளுடன் காய்கறி கனிகள் மிகுந்த பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு வந்தபோதெல்லாம் குடல் புற்றுநோய் இருந்த இடம் தெரியவில்லை. இன்றைய நாகரிக உலகில் பலதரப்பட்ட செயற்கை நிறமூட்டிகளும் மணமூட்டிகளும் மசாலாக்களும் மைதாவும் கூடிக்குலாவி கும்மியடிக்கும் துரித உணவுப் பழக்கம் மக்கள் மத்தியில் வழக்கமான பிறகுதான் குடல் புற்றுநோயின் தாக்கம் வலுவானது; அதிகமானது. உணவு அறிவியல் உணர்த்தும் உண்மை இது.

என்னென்ன அறிகுறிகள் தெரியும்?

நோயின் ஆரம்பத்தில் அடிக்கடி மலச்சிக்கல் தோன்றும். இது ஒரு சாதாரண அறிகுறி என்பதால் அதை அலட்சியப்படுத்துவது வழக்கம். பிறகு மலக்கழிச்சல் உண்டாகும். இந்த அறிகுறி குடலில் அழற்சிப் புண்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால் இப்போதும் புற்றுநோய் குறித்த புரிதல் ஏற்படாது. அடுத்து மலத்தில் ரத்தம் கசியும். உடல் அசதியாக இருக்கும். பசிக்காது. எடை குறையும். ரத்தசோகை காணப்படும். நீடித்த ரத்தசோகை புற்றுநோய்க்கு முக்கிய அறிகுறி. இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். அவசியம் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.  பலருக்கும் பொதுவான வயிற்றுவலி, குமட்டல், வாந்தி ஏற்படலாம்.  சிலருக்கு மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி தொல்லை தரலாம். இறுதியாக குடல் அடைப்பும் ஏற்படுவதுண்டு.

இந்த அறிகுறிகளில் முக்கியமாக மலத்தில் ரத்தம் வருவது, உடல் அசதி உள்ளிட்ட பலவும் மூலநோயிலும் மலவாய் வெடிப்பிலும் பவுத்திரத்திலும் காணப்படும் என்பதால், வந்திருப்பது மூலநோயா, பவுத்திரமா, குடல் புற்றுநோயா என்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்வது நல்லது.

என்னென்ன பரிசோதனைகள்?

மருத்துவர் கையுறை அணிந்த விரலால் மலக்குடலைப் பரிசோதித்தாலே மலக்குடலில் உள்ள புற்றுநோய் தெரிந்துவிடும். பிரக்டாஸ்கோப் மற்றும் கொலனாஸ்கோப் வழியாக மலக்குடலை பரிசோதனை செய்யும்போது கீழ்க்குடலில் கட்டிகள் இருப்பது தெரிந்துவிடும். வயிற்றுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மேல் குடலில் கட்டிகள் இருப்பது தெரிந்துவிடும். பெட் - சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் குடல் புற்றுநோயை மிகவும் தொடக்க காலத்திலேயே தெரிந்துகொள்ள முடியும். பேரியம் எனிமா கொடுத்து வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதும் உண்டு.

கட்டி இருப்பது உறுதியானால் திசுப் பரிசோதனை மூலம் அது புற்றுக்கட்டியா என்பதையும் எந்த வகை புற்றுநோய் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். மார்பு எக்ஸ்-ரே மற்றும் எலும்பு ஸ்கேன் மூலம் அந்தப் புற்றுநோய் உடலுக்குள் நுரையீரல் மற்றும் பிற இடங்களில் பரவியுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். சிகிச்சையைத் தொடங்குவதற்கு, பாதிக்கப்பட்டவரின் பொதுவான உடல்நிலை குறித்து அறிய வழக்கமான ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும்.

குடல் புற்றுநோய் நிலைகள்

நிலை பூஜ்ஜியம்: இது குடல் புற்றுநோயின் ஆரம்ப நிலை (Cancer in situ). குடலில் உள்பக்க சவ்வில் மட்டும் இது இருக்கும். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், சில அடினோமா கட்டிகள் புற்றுக் கட்டிகளாக மாறுவதைத் தடுக்கலாம். அப்போது புற்றுநோயின் பிடியிலிருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். அந்தப் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்திவிடலாம்:

* நிலை 1: இது குடலின் உட்சவ்விலிருந்து தசைப்பகுதிக்குப் பரவியுள்ள நிலை.

* நிலை 2: இது குடலின் உட்சவ்விலிருந்து தசைப்பகுதிக்கும் வெளிச்சவ்வுக்கும் பரவியுள்ள நிலை.

* நிலை 3: இது குடலின் உட்சவ்வு, வெளிச்சவ்வு, தசைப்பகுதி ஆகியவற்றுடன் அருகில் உள்ள நெறிக்கட்டிகளுக்கும் பரவியுள்ள நிலை.

* நிலை 4: இது குடலின் உட்சவ்விலிருந்து தசைப்பகுதிக்கும் அருகில் உள்ள நெறிக்கட்டிகளுக்கும் பரவியதோடு மட்டும் இல்லாமல், கல்லீரல், நுரையீரல், மூளை, எலும்பு போன்றவற்றுக்கும் பரவியுள்ள நிலை.

சிகிச்சைகள் என்னென்ன?

அறுவை சிகிச்சை: ஆரம்ப நிலையில் உள்ள மலக்குடல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கட்டி உள்ள இடத்தைப் பொறுத்து மலப்பை (Colostomy bag) தேவையா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும். நடைமுறையில் மலப்பையைத் தனியாகப் பொருத்தப்படுவதுதான் பலருக்கும் பிரச்னையாகத் தோன்றும். தனியாக மலப்பை தேவையில்லாத வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிற நவீன முறைகள் இப்போது வந்துவிட்டன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேவைப்பட்டால் மருந்து சிகிச்சை/கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரலாம்.பெருங்குடல் புற்றுநோய்க்கு பூஜ்ஜிய நிலையிலிருந்து நிலை 3 வரை முதலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அருகில் உள்ள நெறிக்கட்டிகளும் அகற்றப்படும். அதற்குப் பிறகு மருந்து சிகிச்சை/கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும்.  நான்காம் நிலைக்கு மட்டும் முதலில் மருந்துசிகிச்சை அளிக்கப்படும். பிறகு அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் பரிந்துரை செய்யப்படும். பெருங்குடல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையில் மலப்பை பொருத்தப்படுவது தேவைப்படாது.

மருந்து சிகிச்சை:

பாதிக்கப்பட்டவரின் பொதுவான உடல்நிலை, வயது மற்றும் நோயின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக கூட்டு மருந்து சிகிச்சை நல்ல பலன் தருகிறது. பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் மருந்து சிகிச்சை அளிக்கப்படும். விதிவிலக்காக சிலருக்கு இது அறுவை சிகிச்சைக்கு முன்னரும் தேவைப்படலாம்.

டார்கெட்டட் தெரபி:

புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் மருந்து சிகிச்சைக்கு டார்கெட்டட் தெரபி(Targeted therapy) என்று பெயர். சாதாரண மருந்து சிகிச்சையில் புற்றுசெல்களோடு இயல்பான செல்களும் அழியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்தப் பிரச்னை ‘டார்கெட்டட் தெரபி’யில் இல்லை என்பது இதில் கிடைக்கும் கூடுதல் நன்மை. புற்றுநோய் மருத்துவத்தில் இப்போது வெகுவாக முன்னேற்றம் காணும் மருத்துவம் இது.

கதிர்வீச்சு சிகிச்சை:

பெருங்குடல் புற்றுநோய் மருத்துவத்தில் கதிர்வீச்சு சிகிச்சையின் பங்கு குறைவானதுதான். அதேநேரத்தில் மலக்குடல் புற்றுநோய் மருத்துவத்தில் கதிர்வீச்சு சிகிச்சையின் பங்களிப்பு மகத்தானது. லீனாக் அல்லது கோபால்ட் கருவியில் கதிர்வீச்சு தரப்படுகிறது. நாளொன்றுக்கு ஒருமுறை, வாரத்துக்கு 5 நாட்கள் வீதம், 5 வாரத்துக்கு மொத்தம் 25 முறை தரப்படுகிறது.
 

தொடர் கண்காணிப்பு தேவை

குடல் புற்றுநோயைப் பொறுத்தவரை முதன்மை சிகிச்சைகள் முடிந்த பிறகு அடுத்த 3 வருடங்களுக்கு மருத்துவர் கூறும் இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வதும் தொடர் கவனிப்பும் கண்காணிப்பும் அவசியம். அப்போதுதான் புற்றுநோய் மறுபடியும் தழைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், மலப்பை பராமரிப்பும் முக்கியம்.

(படைப்போம்)

குடல் புற்றுநோயைச் சிறை பிடிக்க என்ன வழி?!

குடும்ப வழியில் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளவர்கள் 15 வயதுக்கு மேல் 5 வருடங்களுக்கு ஒருமுறை கொலனாஸ்கோப்பி பரிசோதனையை மேற்கொண்டால் குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கவனித்துவிடலாம். அதுபோல், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களும் புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களும் ஆண்டுதோறும் கொலனாஸ்கோப்பி பரிசோதனையை மேற்கொண்டால், குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே சிறைபிடித்துவிடலாம். புற்றுநோய் பாதிப்பிலிருந்து எளிதில் விடுபடலாம். மேலும் மலத்தில் மறை ரத்தம்(Occult blood test) பரிசோதனை மூலமும் இதை அறியலாம். டியூமர் மார்க்கர்(Tumor marker) எனப்படும் மரபணு பரிசோதனைகள் சிலவும் இதற்கு உதவுகின்றன. CEA பரிசோதனை (Carcinoembryonic antigen test) அதில் முக்கியமானது.

Related Stories:

>