வெளித்தெரியா வேர்கள்

நன்றி குங்குமம் தோழி

ஒரு சிறு நொடிப்பொழுதில் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றம் கூட பின்னாளில் மிக பிரம்மாண்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம்..!

- கேயாஸ் தியரி

“தொழுநோய் பரவுதலைத் தவிர்த்திட, தொழுநோயாளிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்..!”அது 1946ம் ஆண்டு..நாடு முழுவதும் தொழுநோய் அதிகமாகப் பரவி வந்த சமயத்தில் சிந்து மாகாணத்தில் இப்படி ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட செய்தியை நாளிதழில் படித்த அந்த இளம் மருத்துவருக்கு கோபம்தான் முதலில் வந்தது. தொழுநோய் என்பது பரம்பரை நோயல்ல, மரபணுக்கள் வாயிலாகப் பரவுவதும் அல்ல, தொற்றுநோய் தான் என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துரைத்ததுடன், மூத்த மருத்துவர்கள் பி.சி.ராய் மற்றும் சி.ஜி. பண்டிட் ஆகியோரின் துணையுடன் அந்த மசோதாவையும் ரத்து செய்ய வைத்தார் காந்திஜியின் ஆசிரமத்தில் வசித்து வந்த டாக்டர் சுசீலா நய்யார் என்ற பெண் மருத்துவர்..

மருத்துவர், காந்தியவாதி, பொதுசேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதையெல்லாம் தாண்டி இன்னுமொரு சிறப்பினைப் பெற்றிருந்தார். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிரத்யேக மருத்துவர் என்பதுதான் அது. காந்தியிடம் அவர் வந்ததும் கூட ஒரு சுவையான வரலாறு தான். 1914ஆம் ஆண்டு, தற்போதைய பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் குஞ்சா என்ற கிராமத்தில் பிறந்தவர் சுசீலா.

மூத்த சகோதரன் பியாரிலால் மீது மிகுந்த பாசத்துடன் வளர்ந்த சுசீலா,  தனது சகோதரனைப் போலவே சிறுவயது முதலே காந்தியவாதம் மற்றும் தேசப்பற்றில் அதிகப் பிடிப்புடன் காணப்பட்டார். ஆனால், தனது சகோதரன் மருத்துவப்  படிப்பை உதறிவிட்டு மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தபோது, தானும் அவ்வாறு செய்யாமல் லாகூரின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவத்தை முடித்து, அதன்பிறகு தனது தமையன் வாயிலாக காந்தியடிகளைச் சந்தித்து, அவரது இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.

முதன்முதலாக மகாத்மாவை சந்தித்ததைப் பற்றி தனது புத்தகத்தில் நினைவுகூறும் சுசீலா நய்யார், “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பள்ளி விடுமுறை நாள் ஒன்றில் முதன்முதலாக ரயிலில் அகமதாபாத் வந்தடைந்த அன்றைய இரவில் சபர்மதி ஆசிரமத்தில் வெறும் தரையில் படுத்து உறங்கினேன். மறுநாள் காலையில் என்னை சந்தித்த பாபு, என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, ‘இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டாயா?’ என்பதுதான். ஆம் என்று அதனை ஏற்றுக் கொண்டபோதே, மனதளவில் வெறும் தரைக்கும், காதி உடைக்கும் தயாராகிவிட்டேன்..” என்று கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் சுசீலாவின் சகோதரர் பியாரிலால் மகாத்மா காந்தியின் தனிச்செயலாளராக உயர்ந்திட, சுசீலாவும் 1939ம் ஆண்டில் நாட்டுக்கு முழுமையாக உழைக்கும் தீர்க்கமான முடிவுடன் தாயாரின் விருப்பமின்மையையும் மீறி, வார்தாவின் சேவக்ராம் ஆசிரமத்தில் நிரந்தரமாகக் குடியேறினார். அவர் வார்தாவிற்கு வந்த அதே வருடம் ஊரெங்கும் காலரா பரவ ஆரம்பிக்க, சுதந்திரத்தை விட தனது மருத்துவ சேவை மக்களுக்குத் தேவை என்பதை உணர்ந்த சுசீலா, ஒரு மருத்துவராக களமிறங்கி தனியொருவராக திறம்பட செயல் புரிந்து, மக்களின் நன்மதிப்பையும், மகாத்மாவின் அன்பையும் பெற்றார். அத்துடன் மகாத்மாவின் பிரத்யேக மருத்துவராகவும் உருவெடுத்தார்.

உப்பு சத்தியாகிரகத்தின் போது, தனது தாயாரை மகாத்மாவை சந்திக்க வைத்து, தங்களது நோக்கத்தை காந்தியடிகள் மூலமாக தாயாருக்கு புரிய வைத்து, ஒரு நன்மகளாகவும் நடந்து கொண்டார் சுசீலா. தொடர்ந்து நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒருபுறம் மகாத்மா கைது செய்யப்பட, மறுபுறம், “செய் அல்லது செத்து மடி” என்ற கோஷம் எழுப்பிய கஸ்தூரிபாய் காந்தியுடன் இணைந்து போராடி மும்பையில் கைது செய்யப்பட்டார் மருத்துவர் சுசீலா.

தொடர்ந்து மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில், அவரின் உடல்நிலை மோசமடையும் போது எல்லாம் தன்னால் இயன்றவரை அருகிலிருந்து மருத்துவ சிகிச்சையளித்து அவரைத் தேற்றினார். அதேசமயம் நிமோனியா காய்ச்சலால் கஸ்தூரிபாய் அன்னை மரணமடைய, நிலைகுலைந்து நின்ற மகாத்மாவின் ஆரோக்கியம் சீர்கெடாமல் பார்த்துக் கொண்டதும் மகாத்மாவின் அன்பு மருத்துவர் சுசீலா நய்யார்தான்.

அச்சமயத்தில் காலரா நோய் பெருந்தொற்றாக உருவெடுக்க, காலரா நோய்க்கு மட்டுமல்ல, மற்ற அனைத்து நோய்களுக்கான சிகிச்சை முறைகளும் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 1944ம் ஆண்டு, வார்தாவில் ஆசிரமத்தின் உள்ளேயே சிறிய மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார் சுசீலா.

அவரின் அயராத உழைப்பால், மருத்துவமனை படிப்படியாக வளர்ந்து, பதினைந்து படுக்கையறை கொண்ட கஸ்தூரி பாய் தாய்சேய் நல மருத்துவமனையாக உருவெடுத்தது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய, அம்மருத்துவமனையே பின்னாளில் கஸ்தூரி பாய் அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்கிற ஆல மரமாக தழைத்தோங்கி இன்று பரந்து விரிந்து நிற்கிறது.

தன்னுடைய மருத்துவப் பணிகளையும், தேசப்பற்றையும் இரு கண்களாகப் பார்த்த டாக்டர் சுசீலா நய்யாரிடம், சுதந்திரத்திற்குப் பிறகு காந்திஜி மிக முக்கியப் பணி ஒன்றை ஒப்படைத்து, அவரை பாகிஸ்தானின் பாகல்பூருக்கு அனுப்பினார். ஆம்.. காந்திஜி தன் இரு கண்களாகப் பார்த்த இந்து-முஸ்லிம் போராட்டம் அதிகளவில் இருந்த அந்த இடத்திற்கு, பிரச்சினையை தீர்த்து வைக்க, தனது மருத்துவர் சுசீலா நய்யாரை நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார் காந்திஜி.

ஆனால் சுசீலா பாகிஸ்தானில் பயணித்துக் கொண்டிருந்த அதேசமயத்தில் மகாத்மா காந்தி துப்பாக்கி குண்டுக்கு இரையாகி நாடே நிலைகுலைந்து நிற்க, செய்தியை அறிந்த மருத்துவர் நாடு திரும்பினார். தாங்கொன்றா வேதனையோடு அவர் ஆசிரமம் திரும்பிய அதே வேளையில், “நமது வாழ்வின் மிகப்பெரிய வெளிச்சம் ஒன்று நம்மை விட்டுச் சென்றதோடு, நம் அனைவரையும் இருளில் அமர்த்திவிட்டது” என்ற ஜவஹர்லால் நேருவின் குரல் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது..

பெருந்துயரத்திலிருந்து சுசீலா மீண்டெழுவதற்குள், நாடெங்கும் மகாத்மாவின் மரணத்தையொட்டி தொடர்ந்து நிகழ்ந்த கொந்தளிப்புகளில் இந்துக்களும் சீக்கியர்களும் பாகிஸ்தானிலும், முஸ்லிம்கள் இந்தியாவிலும் கடத்தி வைக்கப்பட, அவர்களை மீட்கும் பணிகளில் மருத்துவர் சுசீலா துணைநின்றதோடு, மோசமடைந்து வந்த சர்தார் வல்லபாய் படேலின் உடல்நிலையையும் உடன் நின்று கவனித்தார்..

அரசியல் வாழ்வில் அயராது ஓடிக்கொண்டிருந்த சுசீலா நய்யாருக்கு, உலக சுகாதார அமைப்பிலிருந்து ஓர் அரிய அழைப்பு வர, சுதந்திர இந்தியாவிற்கு அந்த வாய்ப்பை பயன்படுத்த எண்ணி, உலகின் புகழ்மிக்க ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயிலும் அந்த வாய்ப்பினை மருத்துவர் சுசீலா நய்யார் பயன்படுத்திக் கொண்டார். பொது சுகாதாரம் மற்றும் சமுதாய மருத்துவக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று நாடு திரும்பியவர்,மேலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் தனது மருத்துவப் பணிகளைச் செய்ததோடு, ஃபரிதாபாத் நகரத்தில் காசநோய்க்கான டி.பி சானிடோரியம், இந்தோரில் கஸ்தூரிபாய் கிராம், மகாத்மா காந்தி நினைவு தொழுநோய் அமைப்பு ஆகியவற்றைத் துவக்கவும் ஏற்பாடு செய்தார்.

1952 பாராளுமன்ற தேர்தலில் அவரை முதன்முதலாக காங்கிரஸ் நிறுத்தியபோது தயக்கத்துடன் நின்றவர், அரசியலிலும் வெற்றிபெற்று, சுகாதார அமைச்சராகப் டில்லியில் பொறுப்பேற்றபோது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் அங்கு துவக்கினார். பின்னாளில் மத்திய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றபோதும், அதே முனைப்புடன், நரம்பியல், கருத்தரிப்பு, மனவியல், கண் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை என ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தியதோடு, நாடெங்கும் மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காசநோய் மருத்துவமனைகள், ஆயுர்வேத சிகிச்சை மையங்கள், நவீன மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றைத் துவங்கிட முக்கிய காரணியாக விளங்கினார்.

“தெய்வீகத் தன்மை நிறைந்த இப்பிரபஞ்சத்தின் அதிமுக்கியப் படைப்பு தான் மனிதன். அவன், தனக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அதை மென்மேலும் அபிவிருத்தி செய்யும்போது, பிரபஞ்சத்துடன் அவன் இரண்டறக் கலந்து விடுகிறான்..” என்ற மகாத்மாவின் கருத்தை நன்குணர்ந்து, தன்னை பொதுவாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட டாக்டர் சுசீலா, காலரா சமயத்தில் ஆரம்பித்து ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த வார்தா மருத்துவமனையை, தனது பிரியமான பாபுஜியின் பெயரால் மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் என்ற அறக்கட்டளை நிறுவனமாக மாற்றினார்.

1969 ஆம் ஆண்டு, அறுபது மாணவர்களுடன், அவர் துவங்கிய கல்லூரி, இன்று, இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக, ஆயிரம் படுக்கை வசதிகளுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவி, வருடத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேலான பிரசவங்கள், ஏழாயிரத்திற்கும் மேலான அறுவை சிகிச்சைகள், மாநிலத்தில் சிறந்ததொரு ஐசியூ என்ற பல்வேறு சிறப்புகளுடன் கிளைகள் பரப்பி, நிழல்தந்து நிற்கிறது.

எத்தனையோ மருத்துவர்கள் அவருடன் பணிபுரிந்தபோதும் சுசீலா நய்யார் தனது வாழ்க்கையில் எடுத்த ஒரு சிறிய முடிவு பின்னாளில், இவ்வளவு பிரம்மாண்ட மாற்றத்தை உருவாக்கும் என்பதை அவரே கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார். அனைத்து பணிகளுக்கிடையே தனது எழுத்துப் பணியையும் அதே அர்ப்பணிப்புடன் செய்தவர், “பாபு கீ காரவாஸ் கஹானி”, “ஹமாரி பா”, “காந்தியின் மனைவி கஸ்தூரிபாய்”, “கருத்தடை”, “பெண் சுதந்திரம்” போன்ற பல புத்தகங்களை எழுதியதோடு, தேசிகோட்டம், மில்லினியம் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றார்.

“நேர்மையுடன், உண்மையுடன், விடாமுயற்சியுடன் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் வெற்றியும், செல்வமும் தேடி வரும் என்பதால், மருத்துவம் என்பதை வெறும் தொழிலாகவும், நோயாளி என்பவரை ஒரு நுகர்வோராகவும் பார்க்காமல், உங்கள் குடும்பமாகப் பாருங்கள்..” என்று  இன்றைய இளைய சமுதாய மருத்துவர்களுக்கு தனது அறிவுரையை வழங்குகிறார் டாக்டர் சுசீலா நய்யார்..

நேர்வழியில் சிந்திப்பதும், நேர்வழியில் செயலாற்றுவதும் தான் நேர்மையான வாழ்விற்கு அடையாளம் என்பதை வாழும்வரை உணர்த்திச் சென்ற டாக்டர் சுசீலா நய்யாரை, அவரது நினைவு நாளான ஜனவரி 3 ம் தேதியன்று மட்டுமன்றி, அவரது மரியாதைக்குரிய மகாத்மாவின் நினைவு நாளான ஜனவரி 30 அன்றும் நினைவில் கொண்டு வணங்கிடுவோம்...!

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: