அறிவியல் பெண்கள்!

பெண்கள், சிறுமிகளுக்கான சர்வதேச அறிவியல் தினமாக பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. அறிவியல் துறையில் சாதனைப்படைத்த பெண்களை பற்றி ஒரு குறிப்பு...

ஜானகி அம்மாள் : கேரளத்தைச் சேர்ந்தவர். தாவரவியலில் தாரகையாக விளங்கி பத்மஸ்ரீ  விருது பெற்றவர். இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தைச் சீரமைத்தவர். மருத்துவ மற்றும் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை குறித்து ஆய்வு செய்தவர்.  

முனைவர் கமலா ஹோனி : உயிர்வேதியியல் துறையில் நாட்டிலேயே முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். எளிய மக்களின்  உணவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் இவருடையது. நீரா எனப்படும் பதநீரீல் இருக்கும் ஊட்டச்சத்து தொடர்பான முன்னோடி ஆராய்ச்சியாளர்.

 

ஆசிமா சாட்டர்ஜி : இந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில் அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண். புற்றுநோய்க்கான எதிர்ப்பு குணம் கொண்ட நித்திய கல்யாணி தாவரத்தில் முதல் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல மருத்துவத் தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்தவர்.

அன்னா மணி : வானிலை விஞ்ஞானி. சூரிய கதிரியக்கம் ஓசோன் படலம் போன்ற  ஆராய்ச்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தார். உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்தார்.

ராஜேஸ்வரி சாட்டர்ஜி : கர்நாடகத்தின் முதல் பெண் பொறியாளர். மின்னணு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில மின் தகவல் தொடர்புப் பொறியியல் துறைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

டெசி தாமஸ் : இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்றழைக்கப்படும் இவர் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானூர்தி அமைப்புகளின் இயக்குநர் ஜெனரல் ஆவார்.

ரிது கரிதால் : இந்தியாவின் ராக்கெட் பெண்மணி. மங்கல்யான் திட்டத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

முத்தையா வனிதா : சந்திராயன் - 2 திட்ட இயக்குநர். சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்ற இவர் கோள்களுக்கு இடையிலான திட்டப் பணிகளைத் தலைமையேற்று செயல்படுத்திய, முதல் பெண் விஞ்ஞானியாவார்.

மங்களா மணி : அண்டார்டிகாவின் உறை பனிச் சூழலில் 403 நாட்கள் செலவிட்டு அதிக நாட்கள் பனிப் பகுதியில் தங்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமை பெற்றவர்.

காமாட்சி சிவராமகிருஷ்ணன் : புளூட்டோவை ஆய்வு செய்யும் விண்கலப் பணியில் சிப் மற்றும் அல்காரிதம் உருவாக்கும் பொறுப்பை ஏற்றவர். அமெரிக்காவில் பெண்கள் தலைமையில் செயல்படும் ட்ராபிரிட்ஜ் தளத்தை உருவாக்கியவர்.

சந்திரிமா சாஹா : 85 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முதல் பெண் தலைவர்.

ககன்தீப் காங் : உலகின் பழம் பெரும் அறிவியல் நிறுவனமான  ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி. தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஆய்வகங்களை நிறுவியவர்.

பெண் சாதனையாளர்கள் அறிவியல் துறைக்குள் கோலோச்சுவது சவாலான பயணம். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளியில் அறிவியல் துறையில் சாதிக்கும் பெண் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களாலும் எதிர்கால அறிவியல் துறையில் விஞ்ஞானிகளாகத் தடம் பதிக்க முடியும். அந்த மாற்றங்களைக் குறித்த சிந்தனைகளை சர்வதேச பெண் குழந்தைகளுக்கான அறிவியல் தினத்தில் விழிப்புணர்வாக கொண்டு செல்வோம்.

Related Stories: