பெரம்பூர்: உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இன்று பலருக்கும் மருந்தே உணவாக உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. வேலை பளு, அவசரம், நேரமின்மை காரணமாக ஒரு உணவை எவ்வளவு விரைவாக சமைக்க முடியுமோ சமைத்து சாப்பிடுவதும், 3 வேலையும் ஏதாவது ஒன்றை உண்டால் போதும் என்ற நிலைக்கு இன்று பலரும் வந்து விட்டனர். அந்த உணவில் என்ன நன்மை உள்ளது, என்ன தீமை உள்ளது என்பதை பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. குறிப்பாக, ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதமான கால்சியம் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல பிரச்னைகள் உள்ளன. அவற்றிற்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு பல ஆண்டு காலமாக மாத்திரையை உண்பவர்களே அதிகம்.
ஆனால், எந்தெந்த நோய்க்கு எந்த உணவு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து போதுமான தெளிவு இல்லாமல் உணவு விஷயத்தில் பலரும் கவனம் செலுத்துவது கிடையாது. அதற்கு பதிலாக உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து மாத்திரைகளை மட்டுமே சாப்பிட்டு வரும் சூழ்நிலை உள்ளது.
ஒரு காலகட்டத்தில் கடல் உணவுகளான மீன் வகைகளை மருந்து பொருட்களுக்கு இணையாக நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். காலப்போக்கில் சிக்கன் எனப்படும் கோழி இறைச்சியை பொதுமக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். இதன் விளைவாக மீன் மீது இருந்த மோகம் சற்று குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு நோய்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பலரும் மீன் வகைகளை உணவுகளை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக மீண்டும் ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மீன் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் கெட்ட கொழுப்புகளை கரைத்து, கொழுப்புகள் உடலில் அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள அது உதவுகிறது. ஒவ்வொரு மீன் வகைகளிலும் ஒருவிதமான தனித்துவம் நிறைந்துள்ளது. அதனை மக்கள் தேர்ந்தெடுத்து அதனை உண்பதன் மூலம் நோயின்றி வாழ முடியும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் மத்தி எனப்படும் மீன் வகைகளை சாப்பிடுவதால் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்குவதாகவும், இதில் உள்ள கால்சியம் உடலுக்கு நன்மை பயக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். இதே போன்று கேரமீனில் கொழுப்புக்களின் அளவு குறைவாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்காமல் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
திருக்கை எனப்படும் மீன் வகைகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நானங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதாகவும், பால் சுறா மீன் வகைகளில் பெண்களுக்கு ஏற்படும் மகப்பேறு பிரச்னைகளை தீர்ப்பதாகவும் சுகப்பிரசவம் ஏற்படவும் குழந்தை பெற்ற பின்பு பால் சுரக்கவும் இந்த பால் சுறா பயனுள்ளதாக உள்ளதாகவும், வஞ்சரம், வவ்வால் போன்ற மீன்களில் கொழுப்பு சக்தி தன்மை குறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாகவும் இந்த வகை மீன்களில் அதிக முள் இல்லாததால் பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் ஒருவகையான காஸ்ட்லி மீனாகவும் உள்ளது.
இதேபோல், கடல் உணவுகளில் ஒன்றான நண்டு வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாகவும், எலும்புகளுக்கு இது பயனுள்ள உணவாக உள்ளதாகவும், இதேபோன்று புலிப்பாம்பு, புள்ளி திருக்கை போன்ற மீன் வகைகள் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாட்டிற்கு சிறந்த மருந்தாக உள்ளதாகவும், நெத்திலி மீனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாகவும், இறால் வகைகளில் சிங் இறால் மற்றும் மட்டு இறால் ஆகிய இறால்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், அது உடலுக்கு நன்மை பயக்கும் உணவு பொருளாக விளங்குவதாகவும் கூறப்படுகிறது.
சுதும்பு கவலை போன்ற மீன்கள் ஏழைகளின் உணவாக கருதப்படுவதாகவும், விலை குறைவான இந்த மீன்களை ஏழைகள் அதிக அளவில் வாங்கு உண்பதாகவும், கடம்பா எனப்படும் மீன் வகைகள் ஜீரண சக்தி சிறந்த உணவுப் பொருளாக விளங்குவதாகவும் முள் இல்லாத இந்த வகை மீன்களை ஜப்பானியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதாகவும், சுதும்பு மீன், காரப்பொடி உள்ளிட்ட மீன் வகைகள் சளி தொல்லை போக்கும் தன்மை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனுடன் மிளகு போன்ற மூலிகை பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்கள் தீர்க்க படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய மீனவர் சங்க தலைவர் தயாளன் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் மீன் உணவு என்பது மலிவு விலை உணவாக கருதப்பட்டது. ஆனால், தற்போது டீசல் விலை உயர்வு மற்றும் படகுகளின் மூலப் பொருட்களின் விலை உயர்வுகளால் பொதுமக்களுக்கு சென்றடையும் மீன்களின் விலையும் கணிசமாக உயர ஆரம்பத்துள்ளன. சிக்கன், மட்டன் போன்ற உணவுகளால் ஏற்படும் கெட்ட கொழுப்பு பிரச்னையால் தற்போது மீன் உணவுகளை மக்கள் மீண்டும் அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
கடல் உணவுகளை சாப்பிடுவதால் எந்த வகையிலும் பக்க விளைவுகள் ஏற்படாது. குறிப்பாக கடல் மீன்களை முறையாக பதப்படுத்தி அதை சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் குணமாகும் என்பதை நம் முன்னோர்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கடல் மீன்களை பொதுமக்கள் நம்பி சாப்பிடலாம். உலகின் பல நாடுகளிலும் மீன் வகை உணவுகள் மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பொதுமக்கள் அதிகம் மீன் வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள கலப்படமில்லாத மீன்களை பொதுமக்கள் அதிகம் சாப்பிட வேண்டும்,’’ என்றார்.
* ரசாயன கலவை
ஆரம்பம் முதலே பொதுமக்களுக்கு மீன் உணவுகள் மீது தனிப்பட்ட விருப்பம் இருந்து வந்தது. மீன்களை பிடித்து அதனை கடலில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யும் வரை 15 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரை ஆகிறது. சில விற்பனையாளர்கள் மீன்களை வாங்கி நீண்ட நாட்கள் அது கெடாமல் இருக்க பல ரசாயன கலவைகளை உபயோகிக்க தொடங்கினர். இதனை சிலர் கண்டுபிடித்து ஆதாரத்துடன் நிரூபித்தனர். இந்த செய்திகள் வைரலானதும் பொதுமக்கள் பலரும் மீன்களை வாங்கி உன்ன தயக்கம் காட்டினர். இதன் காரணமாக மீன்களின் மீது மக்களுக்கு இருந்த மோகம் சற்று தணிந்து மீன் விற்பனையும் பாதிக்கப்பட்டது. தற்போதும் பொதுமக்களுக்கு மீன்களில் கெமிக்கல் ஏதாவது கலந்திருக்குமா என்ற ஒரு அச்ச உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது. கெமிக்கல் கலப்பு இல்லாத மீன் விற்பனையை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
* மாத்திரை தயாரிப்பு
மத்தி மீனில் அயோடின் என்ற தாது சத்து உள்ளதால் கால்சியம் குறைபாடு உள்ள நோய்களுக்கு மத்தி மீனில் உள்ள செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோள்கள் பளிச்சென்றும், கண் பார்வை தெளிவாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், கேரள மக்கள் அதிகமாக இந்த மத்தி மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். கால்சியம் குறைபாடு உள்ள பலரும் மத்தி மீனில் இருந்து தயாரிக்கப்படும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
