ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் இன்று காலை செப்பு தேரோட்டம்; பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி சுவாதி திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து தினமும் பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான செப்பு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதற்காக பெரியாழ்வார் சன்னதியில் இருந்து பெரியாழ்வார் மேளதாளங்கள் முழங்க கோயில் அருகே உள்ள செப்பு தேருக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பெரியாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செப்பு தேரோட்டம் நடைபெற்றது. பெண்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து செப்பு தேரை நான்கு ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்தனர்.

செப்புத் தேரோட்டத்தை முன்னிட்டு சிறிது நேரம் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. செப்புத் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: