திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி

திருமலை: திருப்பதி 2வது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டடுள்ளதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிறு, மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல 2 மலைப்பாதைகள் உள்ளது.

அதில் 2வது மலைப்பாதையில் திருமலைக்கு செல்லவும், அங்கிருந்து 1வது மலைப்பாதையில் திரும்பி வரும் வகையில் உள்ளது. இந்த மலைப்பாதைகளில் பக்தர்கள் கார், வேன், டூவீலர்கள் மற்றும் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. சேஷாசல வனப்பகுதியில் தொடர்ந்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பதி-திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தது.

இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஊழியர்களுடன் அங்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை அகற்றினர். மண் சரிவையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தொடர்ந்து, போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘மண் சரிவை நிரந்தரமாக தடுக்க கேரளா அமிர்தா பல்கலைக்கழக மண்சரிவு மற்றும் பாறைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஐஐடி நிபுணர்கள் இங்கு வந்து கள ஆய்வு செய்து அறிக்கையை தர உள்ளனர். இந்த அறிக்கையின்படி பணிகள் நடைபெறும்’ என்றுதெரிவித்தனர்.

Related Stories: