ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

ஆவடி: ஆவடியில் நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுவது, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.

எனினும், கடந்த சில மாதங்களாக மக்களின் மனுக்கள்மீது வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்,  பட்டா கேட்டு மனு கொடுத்த தன்னை ஒரு வருடத்துக்கும் மேலாக ஆவடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர் என ஒரு பெண் அழுது புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று மாலை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கை, எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல், வட்டாட்சியர் அலுவலகத்தின் குறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விசாரித்தார்.

பின்னர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அலட்சியப் போக்குடன் செயல்படும் அதிகாரிகள்மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வில் வட்டாட்சியர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: