மூணாறில் நிற்காமல் கொட்டுது கனமழை சாலைகளில் மண் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு

மூணாறு: மூணாறில் தொடரும் கனமழையால், சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. கனமழையால், கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மூணாறு - தேவிகுளம் சாலையில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் காவல் நிலையம் அருகே சாலையில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், மண் அள்ளும் ேஜசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு, மண் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது. சாலையில் போக்குவரத்து இல்லாத நேரத்தில், மண் சரிவு ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என அதிகாரிகள் கூறினர். மேலும், மூணாறு சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடர்ந்தால் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளை முறையாக கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மூணாறு சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேணடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: