வால்பாறையில் தொடரும் கனமழை மண்சரிவு; வீடுகள் இடிந்து சேதம்: நகராட்சி கமிஷனர் உயிர் தப்பினார்

வால்பாறை: வால்பாறை பகுதியில் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பருவமழை நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக பகல், இரவு என மாறி, மாறி சாரலுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் வால்பாறை நகராட்சி மைதானத்தின் அருகே 30 அடி உயர பாதுகாப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதில் மேல் பகுதியில் இருந்த சாந்தா, ஜோசப் ஆகியோரின் வீடுகள் இடிந்து சரிந்தன. நேற்று காலை நடந்த இச்சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

வால்பாறை - பொள்ளாச்சி சாலை காமராஜ் நகரில், பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த 30 அடி உயர சுவர் சரிந்து மண்ணும் கல்லும் சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு சுவர் இடிந்ததால் மலைச்சரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. வால்பாறை சிறுவர் பூங்கா குடியிருப்பு பகுதியில் சாந்தி என்பவர் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மழையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு, தாசில்தார் விஜயகுமார், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் கவுன்சிலர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் பாதுகாப்பு சுவர்களை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். ஆய்வின் போது நகராட்சி துணைத்தலைவர் செந்தில், நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தொடரும் மழையால் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்து உள்ளனர். சீருடைகள் காய்வதில்லை என கூறும் மாணவர்கள், மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி பள்ளிகளுக்கு வருவதால் சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

மழையுடன் சூறைக்காற்றும் வீசவே வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவின் கார் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, காற்றுக்கு மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆணையாளரின் கார் விபத்தில் இருந்து தப்பியது.

சின்னக்கல்லாரில் 11.7 செமீ மழை பொழிவு

வால்பாறை பகுதியில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 11.7 செமீ மழை பதிவாகி உள்ளது.  கீழ்நீராறில் 10 செமீ, வால்பாறையில் 7.8 செமீ, சோலையார் அணை பகுதியில் 7.2 செமீ மழை பதிவாகி உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்றிரவு விடுத்த அறிக்கையில், ‘‘தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று (7ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Related Stories: