கொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா?!

நன்றி குங்குமம் டாக்டர்

அலசல்

கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு சமூக நோய் எதிர்ப்பு சக்தி(Herd Immunity) ஒன்றே சிறப்பான வழியாக இருக்க முடியும் என்ற கருத்து  வலுவாக ஒலித்து வருகிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் இதே கருத்தை கூறியிருந்தார். உண்மையில் கொரோனாவை வெல்ல Herd  Immunity கை கொடுக்குமா என்று தொற்றுநோய் சிறப்பு நிபுணர் ராஜ்குமாரிடம் கேட்டோம்...

‘‘ஒரு நோயை எதிர்கொள்ள சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் குறிப்பதே சமூக  நோயெதிர்ப்பு சக்தி (Herd Immunity) எனப்படுகிறது. ஒவ்வொரு விதமான தொற்றுநோய்க்கும் வெவ்வேறு விதமான சதவீதத்தில் மாறுபாடு இருக்கும்.  எடுத்துக்காட்டாக அம்மை, போலியோ போன்ற நோய்களுக்கு 90 சதவீத மக்களுக்காவது நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். அதாவது, ஒரு  லட்சம் மக்களில் 95 ஆயிரம் பேருக்காவது நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்தான், இவர்களும் மீதியுள்ள 5 ஆயிரம் பேர்களும் அந்த தொற்று நோய்  வராமல் இருக்கும்.

சாதாரணமாக பன்றிக்காய்ச்சல், நுரையீரல் தொற்றினால் வரும் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு 70 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு  சக்தி இருந்தால் போதுமானது. கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும் 60 முதல் 70 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தி போதும். இந்தியாவைப் பொருத்தவரை ஊரடங்கு மூலம் கொரோனா நோய்த்தொற்று சமுதாயப்பரவலை தற்காலிகமாக தடுத்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக  தடுக்கவில்லை. ஊரடங்கு முடிந்து போக்குவரத்து தடை நீக்கப்பட்டவுடன், மீண்டும் கொரோனா தொற்றுநோய்ப்பரவல் ஏற்படும் அபாயம் உண்டு.  சீனாவில் இரண்டாம் கட்ட தொற்று நோய்த் தாக்கம் மீண்டும் அதிகரித்திருப்பதற்கு, அவர்கள் முழுமையான ஊரடங்கை கடைபிடிக்காமல் ஒரு பகுதி  மட்டும் அடைத்துவிட்டு, ஒரு பகுதியை திறந்து விட்டதே காரணம். நோய்த்தொற்று பாதிக்காத மீதமுள்ளவர்களுக்கு வந்துவிட்டுதான் மறையும்.

சமூக நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு வழிகளில் பெறலாம்.

இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி முதல் வழி. சமுதாயத்தில் நோய்த்தொற்று பரவலாகும்போது, குறிப்பிட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி  இயற்கையாக அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதன் மூலம் மீதமுள்ளவர்களை, தொற்று ஏற்பட்டவர்கள் மறைமுகமாகக் காப்பாற்றுகிறார்கள்.இரண்டாவதாக, தடுப்பூசி போடுவதன் மூலமும் கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை மக்களிடத்தில் உருவாக்கலாம். கொரோனா  வைரஸுக்கு எதிராக தடுப்பூசியோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்பட்டோ அல்லது மக்களின் பயன்பாட்டிற்கு இன்னமும் வர முடியாத சூழலில், முதல்  வழியான இயற்கை வழி சமூக நோய் எதிர்ப்பு சக்தியை(Herd Immunity) உருவாக்குவதுதான் நல்ல தீர்வாக இருக்க முடியும்.

ஊரடங்கை பொறுத்துக் கொள்வது இப்போதைய சூழலாக இருந்தாலும், 70 சதவீத மக்களுக்கு நோய்த்தொற்று பரவுவது ஒரு வகையில் நல்லதுதான்.  அதிக சதவீத மக்கள் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டால், நோய்த்தொற்று பரவுவது குறைந்துவிடும். ஒரு கட்டத்தில்,  அப்படியே கொரோனா தொற்று நின்றுவிடும் வாய்ப்பும் உண்டு. அதற்குள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் நம்பலாம். இதன்மூலம்  மீதமுள்ள 30 சதவீத மக்களை காப்பாற்றி விடலாம். இதற்கு முன் போலியோ, பெரியம்மை தொற்று நோய்களுக்கான போரில் வென்றுள்ளோம்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே அச்சம் தேவையில்லை.

அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியது 30 சதவீத மக்களில், முதியவர்கள், புற்றுநோயாளிகள், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு போன்று ஏற்கனவே  நோய் பாதிப்புள்ளவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவர்களை வீட்டிற்குள்ளே வைத்து, மற்றவர்களை வெளியில் விட்டு,  நோய்ப்பரவலாக்க வேண்டும். இப்படி செய்யும்போது 3 மாதங்களுக்குப்பிறகு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப்போன்று அதிக இறப்பு  விகிதம் இல்லாமல் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து நம்நாட்டு மக்களை பத்திரமாக மீட்டெடுக்கலாம்.

அந்த நாடுகளில் எல்லாம் இதை கவனத்தில் கொள்ளாததே அதிக மனித இழப்புகள் ஏற்பட்டது. அவ்வப்போது இடைவெளிவிட்டு, ஊரடங்கை  தளர்த்துவதும், கட்டுப்படுத்துவதுமான நடவடிக்கைகளில், தொற்றுநோயின் வீரியம், தாக்கம் ஒவ்வொருவரிடத்திலும் எப்படி வேறுபடுகிறது என்பதை  அரசு தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒரு சிலருக்கு தொற்று நோய் வந்துபோனதற்கான எந்தவொரு அடையாளமுமே இல்லாமலே கூட  இருந்திருக்கலாம். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து நோயின் வீரியம் மாறுபடும். அதேபோல ஒவ்வொரு பகுதியிலும் நோயின்  தீவிரத்தன்மை மாறுபடும்.

இதையெல்லாம் அந்தந்த பகுதியில் உள்ள மக்களிடத்தில் சீரற்ற(Random) ரத்த மாதிரி பரிசோதனைகளை செய்வதன் மூலம் கண்டு பிடிக்க முடியும்.  இப்போதைக்கு மற்ற நாடுகளைப்போல நம் நாட்டில் அவ்வளவு பெரிய தாக்கம் இருக்காது என்ற அறிஞர்களின் கணிப்பு நமக்கு கொடுத்துள்ள  ஆறுதலான விஷயம். பொதுமக்களாகிய நாம், ஊரடங்கு முடிந்தவுடன் பழையபடி கட்டுப்பாடின்றி இருக்காமல் வெளியே செல்பவர்கள் வீட்டில் உள்ள  முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதை குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் உறுதி எடுத்துக்  கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு செய்யும் பேருதவி. இதெல்லாம் முடிந்து 3 மாதங்களுக்குப்பிறகே, சமூகநோய் எதிர்ப்பு சக்தி நம் நாட்டில் எந்த  அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை கணிக்க முடியும்.

- என்.ஹரிஹரன்

Related Stories:

>