பந்தலூர் அருகே உணவு தேடி வந்து வீட்டை சூறையாடிய காட்டு யானை: மக்கள் அச்சம்

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் காட்டு யானை வீட்டை உடைத்து சேதம் செய்தது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி சேலகட்டை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளி நாகலிங்கம் (60) என்பவர் வீட்டின் சமையலறையை உடைத்து சேதம் செய்து சமையறையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் வெளியேஇழுத்து ருசித்து சேதம் செய்தது.இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாகலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்த கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டியுள்ளனர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்ட யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுமக்கள் கூறுகையில், ‘‘தேவாலாட்டி, கைதுக்கொல்லி, தேவாலா பஜார், வாழவயல், பாண்டியார் போன்ற பகுதிகளில் ஒற்றை யானை நாள்தோறும் குடியிருப்புகளை தாக்கி சேதம் செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்.

பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் சுற்றித்திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானை சேதப்படுத்தியுள்ள வீட்டிற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: