கச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து; விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு!

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கச்சூரில் இருந்து சித்தூர் வரை 6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ. தூரத்துக்கு 3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் 18 கிராமங்களிலும் பொன்னேரி, பள்ளிப்பட்டு வட்டத்தில் தலா 6 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஆலப்பாக்கம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை விவசாயிகள் தடுத்துநிறுத்தி மறியல் நடத்தினர். இதனால் பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றனர். இந்த நிலையில், விவசாய நிலம் மற்றும் குடிநீர் ஆதாரங்களை சேதப்படுத்திவிட்டு சாலை அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சாலை அமைக்கும் பணியை எப்படியாவது தடுத்து நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில்,ஊத்துக்கோட்டை அருகே வடமதுரை, கீழ்மாளிகை பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. ‘’சாலை அமைக்கும் பணியை ஒன்றிய அரசு தொடரக்கூடாது’ என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: