திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலித்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா விமரிசையாக நடந்தது. அதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எழுந்தளியுள்ள நடராஜருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் சிறப்புமிக்கது. மார்கழி திருவாதிரையில் அருணோதயகால  பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் உகந்தது.

மேலும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நிகழ்த்தப்படும். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று காலை விமரிசையாக நடந்தது.அதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், அபிஷேகமும், 16 வகையான தீபங்களால் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், காலை 10 மணியளவில் அலங்கார ரூபத்தில் சுவாமியும், அம்மனும் 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பின்னர், திருமஞ்சன கோபுரத்தை அடுத்த கட்டை கோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்று மகிழமரம் முன்பு சுவாமியும், அம்மனும் எதிரெதிர் நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமி மாடவீதியுலா நடைபெற்றது.

Related Stories: